குடியரசு தலைவர் இன்று தமிழகம் வருகை - மதுரை கோயிலில் தரிசனம் செய்த பிறகு கோவை செல்கிறார்

By செய்திப்பிரிவு

மதுரை/கோவை: இரு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் கோவை செல்லும் அவர், ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.

புது டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (பிப்.18) காலை 11.40 மணிக்கு திரவுபதி முர்மு வருகிறார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்கிறார்.

பின்னர், 11.50 மணிக்கு விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் குடியரசுத் தலைவர், கீழச் சித்திரை வீதிக்கு நண்பகல் 12.15 மணிக்கு வருகிறார். அம்மன் சந்நிதி நுழைவு வாயிலில் அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்பு மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் தரிசனம் செய்கிறார்.

கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு 12.45 மணிக்கு மேல் காரில் புறப்பட்டு அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் செல்கிறார். அங்கு மதிய உணவுக்குப் பின்பு கோரிப்பாளையம், கீழவாசல் வழியாக விமான நிலையம் சென்றடைகிறார்.

பின்னர் 2.10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, குடியரசுத் தலைவர் காரில் செல்லும் வழித்தடப் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரையிலிருந்து கோவை செல்லும் குடியரசுத் தலைவர், மாலை 5.45 மணிக்கு ஈஷா வளாகத்தை அடைகிறார். அங்கு, மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். விழாவுக்கு பின்னர், இரவு 8.30 மணிக்கு ஈஷா வளாகத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு இரவு ஓய்வெடுக்கிறார்.

நாளை டெல்லி பயணம்: நாளை காலை கோவை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு செல்கிறார். காலை 10.10 மணிக்கு முப்படை பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பிறகு ஹெலிகாப்டர் மூலம் கோவை வரும் அவர், பகல் 12.25 மணிக்கு டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி 5 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE