திருப்பூரில் 4-ம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: தார் சாலையை பெயர்த்து பீறிட்ட தண்ணீர்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சியில் 4-ம் கூட்டுக் குடிநீர் திட்ட சோதனை ஓட்டத்தில் குழாய் உடைந்தது. தண்ணீர் வெளியேறிய அழுத்தத்தில் தார் சாலையே பெயர்ந்ததால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 4-ம் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த ஒரு மாத காலமாக சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழாய் மூலமாக தண்ணீர் விரைவாக செல்கிறதா என அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதிக அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது தொடர் கதையாகிவிட்டது.

நேற்று அதிகாலை திருப்பூர் அருகே புதுப்பாளையம் ஊராட்சி வஞ்சிபாளையம் வெங்கமேடு பகுதியில் 4-ம் கூட்டுக்குடிநீர் திட்ட சோதனை ஓட்டத்தில், குழாய் உடைந்தது. சாலையை பெயர்த்துக்கொண்டு பல அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சியில் 4-ம் கூட்டுக்குடிநீர் திட்ட சோதனை ஓட்ட முயற்சிகளில், குழாய் உடைந்து தேவையின்றி குடிநீர் விரயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறிய அழுத்தத்தில் சாலையே பெயர்ந்துவிட்டது. எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டால், வாகனஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாவர். எனவே, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சோதனை ஓட்டத்தை தொடர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் குழாய்களை தரமாக அமைத்து குடிநீரை விநியோகிக்க வேண்டும். குழாய் உடைப்பு போன்ற பிரச்சினைகளால் தண்ணீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும், என்றனர்.

புதுப்பாளையம் ஊராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘வெங்கமேடு பகுதியில் 4-ம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணானது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. குழாயை தரமாக பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE