ராணுவ வீரர் கொலையை கண்டித்து சென்னையில் பிப்.21-ல் பாஜக உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வழக்கறிஞர் பால்கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றைஅளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கரு.நாகராஜன் கூறியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தொடர்ந்து வன்முறை சம்பங்கள் நடக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை. எங்கள் கட்சியின் பட்டியலின பிரிவுத் தலைவர் தடா பெரியசாமி வீடு தாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களை கண்டித்து சென்னையில் வரும் 21-ம் தேதி பாஜகமாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறஉள்ளது. மாலையில் உண்ணாவிரத போராட்டம் முடிந்தவுடன் அங்கிருந்து ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்திச்செல்வர். போர் நினைவுச்சின்னத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கு அழைப்பு

இதற்கு போலீஸ் அனுமதிகேட்டு மனு கொடுத்துள்ளோம். உரிய அனுமதி தருவதாக கூறி இருக்கிறார்கள். எந்த இடத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படும் என்பதைசொல்வதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களும் கலந்து கொள்ளுமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE