சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மறு நியமன போட்டி தேர்வை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்பு கொண்டு பேசியதால், போராட்டம் மாலையில் வாபஸ் பெறப்பட்டது.

‘ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணையை ரத்துசெய்ய வேண்டும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாசார்மு.புகழேந்தி, மாநில தலைவர் ஏழுமலை உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம், இக்கூட்டமைப்பின் மாநில செயலாளர் கபிலன் சின்னசாமி கூறியதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். ஆனால், இதுவரை எங்களுக்கு அரசு பணி கிடைக்கவில்லை. தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு மறு நியமன போட்டித் தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணையை வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ‘திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். ஆனால், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மறு நியமன போட்டித்தேர்வை ரத்து செய்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். தற்போது உள்ள வயது வரம்பை தளர்த்தி பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஸ் நேற்று மாலை, செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இடைத்தேர்தல் முடிந்த பிறகு,கோரிக்கைகள் குறித்து பேச வருமாறு அழைத்தார். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இத்தகவலை கபிலன் சின்னசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE