மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு? - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை 

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். குறிப்பாக மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மதுரை டைடல் பூங்கா திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE