சென்னையில் ரூ.300 கோடியில் புதிதாக மழை நீர் வடிகால் பணி: மாநகராட்சி திட்டம்  

By செய்திப்பிரிவு

சென்னை: ரூ.300 கோடியில் புதிதாக மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருபுகழ் தலைமையில் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்துறை வல்லுனர்கள் அடங்கிய, எந்தெந்த இடங்களில் வடிகால் பணிகள் அமைக்கலாம் என்று தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் பரிந்துரை அளித்து வருகின்றனர்.

அதன்படி, வரவிருக்கும் பருவமழைக்கு, தற்போது இருந்தே மழைநீர் வடிகால் பணிகளை துார்வார, திருபுகழ் கமிட்டி பரிந்துரைத்தது. அதேபோல், 2022-ம் ஆண்டில் துவங்கப்பட்டு, பருவமழைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் விரைந்து துவங்கவும் அறிவுத்தியது.

இந்நிலையில், சென்னையின் மைய பகுதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் விடுப்பட்டுள்ள சாலைகள், தெருக்களில் புதிய மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, 300 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில் 4,070.10 கோடி ரூபாய் மதிப்பில், 1,033.15 கி.மீ., நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ல் துவங்கப்பட்டது. இதில், 300 கி.மீ., நீளத்திற்கு மேல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும், இந்தாண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டுகளில் முடிக்கப்படும்.

இதற்கிடையே, சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகள், தெருக்களில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, 300 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், வடிகால் இல்லாத பகுதிகள் மற்றும் இணைப்பு இல்லாத பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE