கொலை மிரட்டல் வழக்கு: முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மனு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கு நீலகிரி மாவட்டம் மஞ்சூர் போலீஸார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மணிக்கல் பகுதியை சேர்ந்த ராஜு என்பவர் மஞ்சூர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், தனக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை விற்க மறுத்ததால், தனது தோட்டத்தை நாசம் செய்ததுடன், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் புத்திசந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி புத்திசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், "புகார்தாரர் ராஜுவின் சகோதரரின் 12 சென்ட் நிலத்தை தான் வாங்க முயற்சித்தேன். அதற்காக ராஜு தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். மேலும் புகார்தாரர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர். எனவே, எனக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார். புகார்தாரர் கூறுவது போல எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மஞ்சூர் போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE