சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டையில் ஈடுபட்ட தமிழக மீனவரை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால், தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடக வனத்துக்குள் சிக்கிய தமிழர்கள்: சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு செல்கிறது. காவிரி ஆற்றுடன் பாலாறு இணையும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியில், தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் அத்துமீறி கர்நாடக வனப்பகுதிக்குள் நுழைந்து மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வருவதும் உண்டு.
மான் வேட்டை: இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இரண்டு பரிசல்களில் கோவிந்தபாடி, தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த மீனவர்கள் பாலாற்று வழியாக சென்றுள்ளனர். கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (40), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) உள்பட 4 பேர் பரிசலில் சென்று, கர்நாடக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, மான் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு: கர்நாடக வனத்துறையால், வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வனப்பகுதியில், தமிழக மீனவர்கள் நான்கு பேர் நடமாடியதை, வனத்துறை அதிகாரிகள் பார்த்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக வனத்துறையினர், நால்வரையும் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து, ஆற்றுக்குள் விழுந்துள்ளார். மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். ஊர் திரும்பியவர்கள் ராஜாவை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்ட சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.
» அதானி விவகாரம் | மத்திய அரசு அளித்த மூடிய பரிந்துரை கடிதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
குண்டடி பட்டு இறந்தவர் உடல் மீட்பு: இந்தச் சம்பவத்தையடுத்து, தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு செக்போஸ்ட்டில் அதிகளவு போலீஸார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை அடியாறு வழியாக காவிரி ஆற்றில் ராஜா உடல் மிதந்து வந்தது. இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் திரண்டனர். தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி ராஜாவின் உடலை மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் பர்கூர் எல்லைக்குட்பட்ட அடியாற்றில் ராஜாவின் உடல் மீட்ட போலீஸார், அவரது உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். ராஜா மீது ஏற்கெனவே தமிழக, கர்நாடக மாநிலங்களில் மான் வேட்டையாடியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையாடிய போது, வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜா உயிரிழந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை முழு அறிக்கை கிடைத்த பின்னரே, மேலும் தகவல்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்: கர்நாடக வனத்துறையால் தமிழகத்தை சேர்ந்த மீனவர் சுட்டு கொல்லப்பட்டதால், இருமாநில எல்லையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் எஸ்.பி சிவக்குமார் எல்லைப் பகுதிக்கு விரைந்த சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பதற்றச் சூழலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தமிழக-கர்நாடக எல்லையில் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குரவத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களை ஒட்டியுள்ள கிராம மக்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க ரோந்து சென்று, கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கைப்பற்றிய இரண்டு மூட்டை மான் இறைச்சி: கர்நாடக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மான் வேட்டையில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கும் வகையில் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்ட போது, எதிர் தரப்பினர் வனத்துறை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால், கர்நாடக வனத்துறை எதிர் தாக்குதல் நடத்தியதில் ராஜா துப்பாக்கி குண்டடிபட்டு உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக வனத்துறை அதிகாரிகள், அம்மாநில போலீஸில், தமிழக மீனவர்கள் நால்வர் தங்களை கொலை செய்ய முயற்சித்ததாக புகார் அளித்துள்ளனர். மேலும், கர்நாடக வனத்துறையினர் பரிசலில் இருந்த இரண்டு மூட்டை மான் இறைச்சி மற்றும் நாட்டு துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.
இதேபோல கடந்த 2018ம் ஆண்டு நடந்த சம்பவம்: கடந்த 2018-ம் ஆண்டு தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் பழனி என்பவரை கர்நாடக வனத்துறையினர் சுட்டு கொன்றனர். தற்போது, குண்டடி பட்டு உயிரிழந்த ராஜா, பழனியுடன் சென்ற போது, காலில் குண்டு பட்டு காயம் அடைந்துள்ளார். அப்போது, பழனி மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து, பாலாறு செக்போஸ்ட் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தி சூறையாடினர். இதனால், இருமாநில எல்லையில் பதற்ற சூழல் ஏற்பட்டது. தற்போது, கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜா உயிரிழந்த நிலையில், மீண்டும் இருமாநில எல்லையில் பதற்ற சூழல் உருவாகத வகையில் பலத்த போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago