மருத்துவ காப்பீட்டுத் திட்ட பதிவுக்கு வட்டார அளவில் அலுவலகம் திறக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவுக்கு மாவட்ட அளவில் ஒரே ஒரு அலுவலகம் மட்டுமே உள்ளதால் பொதுமக்களும் நோயாளிகளும் தவித்து வருகின்றனர். இதனால், வட்டார அளவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய்பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.38 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் சுமார் 1.40 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

ஆனால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்காக மாவட்ட தலைமையிடத்தில் மட்டுமே அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திற்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இவர்கள் பெரும்பாலானோர் மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைச் சேர்ந்தவர்கள். குறைந்தது 3 பேருந்துகள் ஏறிவந்து காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திற்கு வர வேண்டியுள்ளது. காலை 10 மணிக்கு வருவோருக்கு மட்டுமே முன்பதிவு அடிப்படையில் காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிவு செய்யப்படும் நிலை உள்ளது. அதோடு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 நபர்களுக்கு மட்டுமே பதிவுசெய்யும் நிலையும் உள்ளது.

இதனால், மாவட்டத்தின் கடைகோடி பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மாலை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதோடு, பல நேரங்களில் சர்வர் பழுது காரணமாகவும் பதிவு செய்யும் பணி பாதிக்கப்படுகிறது. ஆனாலும், சராசரியாக மாதம் சுமார் ஆயிரம் நபர்கள் வரை பதிவுசெய்யப்படுகிறது. எனவே, பலர் ஒருநாள் முழுவதும் காத்திருந்தும் பதிவுசெய்யாமல் திரும்பிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே, வட்டார அளவில் மருத்துவக் காப்பீட்டுப் பதிவுக்கான அலுவலகங்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் திறக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE