தமிழக மீனவர் சுட்டுக்கொலை | கா்நாடக வனத்துறையை மன்னிக்க முடியாது: அன்புமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றால் இலங்கை கடற்படையினராலும், காட்டுக்கு சென்றால் கர்நாடக வனத்துறையினராலும் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாவதை அனுமதிக்கக் கூடாது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர். மனிதநேயமற்ற இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 3 பேர் தமிழக - கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் உள்ள மீன் பிடிப்பதற்காக சென்றனர். கடந்த 14-ஆம் தேதி இரவு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கர்நாடக வனத் துறையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ராஜா என்ற மீனவர் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் உயிரிழந்தார். மற்ற இருவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

கர்நாடக எல்லையையொட்டிய பகுதிகளில் வாழும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இரு மாநில எல்லைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன்பிடிப்பது வழக்கம். இது வாழ்வாதாரம் சார்ந்த ஒன்று தானே தவிர, இதில் விதிமீறலோ, குற்றமோ எதுவும் இல்லை. கர்நாடக எல்லை இந்தியாவின் ஒரு பகுதி தானே தவிர, இலங்கையின் எல்லையோ, பாகிஸ்தானின் எல்லையோ அல்ல. ஒருவேளை இரு மாநில எல்லையில் உள்ள நீர்நிலைகளில் மீன் பிடிப்பது தவறு என்றால் விரட்டியடித்திருக்கலாம் அல்லது சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இரக்கமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர் மீது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருப்பது பெருங்குற்றம். இதை மன்னிக்க முடியாது.

இரு மாநில எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 23.10.2014-ஆம் நாளில் அதே அடிப்பாலாறு பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர் பழனி என்பவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கர்நாடக எல்லை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினார்கள். அதேபோன்ற பதற்றம் இப்போதும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மீனவரை சுட்டுக் கொன்றதை திசை திருப்பும் நோக்கத்துடன், அவர்கள் மான் வேட்டைக்கு சென்றதாகவும், அப்போது வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் தான் ராஜா உயிரிழந்து விட்டதாகவும் கர்நாடக வனத்துறையினர் பொய்யான செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். கடலுக்கு சென்றால் இலங்கை கடற்படையினராலும், காட்டுக்கு சென்றால் கர்நாடக வனத்துறையினராலும் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாவதை அனுமதிக்கக் கூடாது.

கர்நாடக எல்லைப் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர் ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையோரை கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்