தெற்கு ரயில்வேயில் 22,357 பணியாளர்கள் பற்றாக்குறை - காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வே ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.பாண்டியராஜா, “அதிக தேவை இருந்தும், போதிய ரயில் ஓட்டுநர், ரயில் மேலாளர்(கார்டு) மற்றும் டிக்கெட் பரிசோதகர் இல்லாததால், தாம்பரம் - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க முடியாக நிலை உள்ளது. பாதுகாப்புப் படைகளின் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். போதிய பணியாளர்களை அமர்த்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதுபோல, டிக்கெட் கவுன்ட்டர்களில் ஊழியர்கள் நெருக்கடியால் அடிக்கடி ரயில்வே ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது, குறிப்பாக தாம்பரம் - செங்கல்பட்டு பிரிவில் உள்ள பல டிக்கெட் கவுன்ட்டர்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விரைவு மற்றும்புறநகர் ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கெட் வழங்க 6 முதல் 10 கவுன்ட்டர்கள் இருந்தன. தற்போது, 1 அல்லது 2 கவுன்ட்டர்கள் இயங்கி வருவதால், நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

இதுதவிர, ரயில் ஓட்டுநர்கள் பிரிவில் பல்வேறு நிலைகளில் சுமார் 471 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆட்சேர்ப்பு பணிகள்: இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 6 கோட்டங்களில் காலியாக உள்ள 19,021 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு பணிகள் பல்வேறு கட்டங்களில் நிறைவடைந்துள்ளன. 6,755 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அவர்களில் சிலர் பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 12,226 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதுதவிர, 9,212 குரூப் சி பணியிடங்களை நிரப்புவதற்கான உடல்திறன் தேர்வு ஜனவரியில் நிறைவடைந்தது. வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான ஆவண சரிபார்ப்பு விரைவில் நடத்த திட்டமிடப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE