மதுரையிலிருந்து கோவை, புதுக்கோட்டைக்கு மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், கல்லீரல் அனுப்பி வைப்பு: 2 பேர் மறுவாழ்வு பெற்றனர்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையி லிருந்து மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், கல்லீரல் கோவை, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர். விருதுநகர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த செல்வம் (33) மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது இதயம் கோவை மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும், அவரது கல்லீரல் புதுக்கோட்டை மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கும் தானமாக வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரது இதயம், வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் நேற்று சிந்தாமணி, சின்ன உடைப்பு, கப்பலூர், திண்டுக்கல் வழியாக கோவை தனியார் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்துவதற்காக பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. அதேபோல், கல்லீரல் புதுக் கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதற்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார், உதவி ஆணையர் செல்வின் உட்பட 200 போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனால் சாலை சந்திப்புகளில் எந்த தடையுமின்றி ஆம்புலன்ஸ்கள் விரைவாக சென்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE