2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் ‘காவேரி’!

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் பசுமை வழிச் சாலையில் சுரங்கம் தோண்டும் பணி இன்று (பிப்.16) தொடங்கியது. இந்தச் சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு ‘காவேரி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோரயில் திட்டம், ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இது வடக்கு, மத்திய, தென் சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும்.

அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கும் விதமாக இந்த வழித்தடம் அமையவுள்ளது. முதல் கட்டமாக, மாதவரம் பால் பண்ணை பகுதியில் முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் பயன்படுத்தும் பணி அக்டோபரில் தொடங்கியது.

இதற்கிடையில், இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக, ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. பூமிக்கடியில் முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் கடந்த மாதம் இறுதியில் இறக்கப்பட்டு, தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பசுமை வழிச் சாலை வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி இன்று (பிப்.16) தொடங்கியது.

பசுமை வழிச் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை 1.26 கி.மி நீளத்திற்கு சுரங்கம் தோண்டப்படவுள்ளது. இந்தச் சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கம் தோண்டும் இயந்திரம் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து திரு.வி.க பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து அடையாறு சந்திப்பு நிலையத்தை ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு வந்து அடையும். பசுமை வழிச்சாலையில் இருந்து இயக்கப்படும். அடுத்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு ‘அடையாறு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE