அரசு திட்டங்கள் மீதான விமர்சனங்களை புறந்தள்ளாதீர்கள்: சேலத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

By செய்திப்பிரிவு

சேலம்: "அரசு அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக நாடிவரும் மக்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் கனிவாக, பொறுமையாக நடந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும்" என்று ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை (பிப்.16) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "ஓர் அரசு ஏன் இயங்குகிறது? அரசு அதிகாரிகளின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சட்டங்களும், திட்டங்களும் எதற்காக வகுக்கப்படுகின்றன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்கும் போது நமக்கு கிடைக்கும் ஒரே பதில் “மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தல்” என்பது மட்டுமே.மக்கள் தங்கள் குறைகளை, தேவைகளை, அரசு தீர்த்திடும் என்ற நம்பிக்கையில் அவற்றையெல்லாம் மனுக்களாக நம்மிடத்தில் வழங்குகிறார்கள். அவற்றை, நாம் வெறும் காகிதங்களாக பார்க்காமல் ஒருவரின் வாழ்வாக, எதிர்காலமாக கருதி பார்க்கவேண்டும்.

இருக்க வீடு; நடக்க சாலை; குடிக்க தண்ணீர்; இரவில் தெருவிளக்கு; படிக்கப் பள்ளி; கிராம சுகாதாரம் - இதைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவற்றை தரமாக வழங்குவதில் என்ன சிரமம் இருந்தாலும் அவற்றை தீர்த்து முன்னேற்றம் காணுங்கள். விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவ்வரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வு வளமானால்தான், மாநிலம் வளரும், அது வளம் பெற்றதாகக் கருதப்படும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திடுங்கள்.

அடுத்தபடியாக, சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் வரக்கூடிய அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திடவேண்டும். அதோடு நில்லாமல், குறைகள் களையப்பட்டதையும் பதில் செய்தியாக அதே ஊடகத்திற்கு நீங்கள் அளிக்கவேண்டும். இது மிக மிக முக்கியமாக நீங்கள் உங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒன்றை உங்கள் அனைவரிடமும் குறிப்பாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், அரசு அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக நாடிவரும் மக்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் கனிவாக, பொறுமையாக நடந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உதாரணமாக, ஒரு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஏதேனும் ஒரு தேவைக்கு ஒருவர் வரும் போது, அங்கு அவர் எதற்காக வந்துள்ளார்? அதை யார் செய்வார்? அதற்கான மனு விபரங்களின் தேவை என்ன? ஆகியவை குறித்து பதில் கூற தற்போது யாரும் இல்லை என நினைக்கிறேன். இதனை சரி செய்ய வேண்டும். காவல்துறையில், வரவேற்பாளர் என்ற அமைப்பு காவல் நிலையத்தில் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள

முயற்சியை, பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பிற துறைகளும் மேற்கொள்ளலாம் என்ற ஆலோசனையை கூறிட விரும்புகிறேன். நான் முன்பே குறிப்பிட்டதைப் போல மக்கள் நலன் கருதியே அனைத்துத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை கொண்டுசேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை காலத்தே செய்யுங்கள். செய்தும் வருகிறீர்கள். இன்னும் சிறப்பாக பணியாற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE