சென்னை கோட்டத்தில் 18 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோட்டத்தில் உள்ள 18 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், உலகத் தரத்தில் வசதிகளை ஏற்படுத்தவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள 6 ரயில்வே கோட்டங்களில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, 9 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், பல்வேறு ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை ரயில்வே கோட்டத்தில் 18 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல், ஆவடி, தாம்பரம் ரயில்நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருகிறது. இந்த 3 ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களுக்கு இணையாக பிரத்யேக நுழைவுவாயில் மற்றும் வெளியேறுதல் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, அம்ரித் பாரத் ரயில்நிலைய திட்டத்தின் கீழ், சென்னைகடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, திருத்தணி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக, மேற்கூரை, உயர்மட்ட நடைமேடைகள், பிரத்யேக பாதசாரி பாதைகள், நன்கு திட்டமிடப்பட்ட வாகன நிறுத்தங்கள், சரியாக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள் போன்றவை ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு நிலையத்தையும் நவீனமயமாக்க சிறப்பான திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘‘ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம். இதன்படி, ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறைகள், கழிவறைகள், மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் ஆகியவை மேம்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். இலவச வைஃபை, சிறப்பான பயணியர் தகவல் முறை, நிர்வாக ஓய்வறைகள், வணிக கூட்டங்களுக்கான இடங்கள் ஆகியவையும் உருவாக்கப்படும். சாலைகளை விரிவாக்கி, தேவையற்ற கட்டமைப்புகளை அகற்றுவதன் மூலம், பயணிகள் சிரமமின்றி வந்து செல்லும் விதமாக ரயில் நிலைய நுழைவுவாயில்கள் மேம்படுத்தப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE