சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் முன்பு முதல்வர் ஸ்டாலின் செல்ஃபி!

By செய்திப்பிரிவு

சேலம்: "9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் இந்த நுழைவு வாயில், பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "சேலம் கள ஆய்வின்போது வழியில் மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். T.R.சுந்தரம் அவர்கள் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன்.

9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவு வாயில், பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு நிர்வாக செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இதன்படி புதன்கிழமை (பிப்.15) காலை சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில், ஈரடுக்கு பேருந்து நிலையம், விக்டோரியா கலையரங்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள், சேலம் சரக டிஐஜி., மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா மற்றும் நான்கு மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். | வாசிக்க > சிறுதானிய பதப்படுத்தும் மையம், தென்னை ஆராய்ச்சி மையம் வேண்டும்: சேலம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE