மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்.18-ல் குடியரசு தலைவர் சிறப்பு தரிசனம்: டெல்லி அதிகாரிகள் பாதுகாப்பு ஆய்வு 

By என்.சன்னாசி

மதுரை: மதுரை மீனாட்சி கோயிலில் இம்மாதம் 18-ல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசனம் செய்வதையொட்டி, டெல்லி அதிகாரிகள் குழு இன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தது. இதன்பின், மதுரையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன் முறையாக தனி விமானம் மூலம் மதுரைக்கு பிப்.18-ம் தேதி வருகிறார். உலக பிரசித்த பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிவராத்திரி சிறப்பு நிகழ்வில் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 18-ம்தேதி காலை 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு, 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். இதன்பின், 12.5 மணிக்கு கோயிலுக்கு வருகிறார். தரிசனம் முடித்து, 1.45 க்கு புறப்பட்டு 2 மணிக்கு மதுரை விமானம் சென்றடைந்தபின், கோவைக்கு செல்கிறார்.

இதையொட்டி, மதுரை விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாலை மார்க்கமாக செல்லும் வழித் தடங்கள் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிலும் தகுந்த பாதுகாப்பு அளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றிலும் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல் செய்யப்பட்டது. 8 இடத்தில் டவர் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் தங்கியோர் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 17, 18ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு தலைவருக்கான சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் (எஸ்பிசி) குழுவினர் எஸ்பி ஒருவர் தலைமையில் மதுரை வந்தனர். அவர்கள் மீனாட்சி கோயில் முழுவதும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். குடியரசு தலைவரின் வருகை, சாமி தரிசனம், அன்னதானத்தில் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் காவல் ஆணையர் நரேந்திரன், உதவி ஆணையர்கள் காமாட்சி, வேல்முருகன் (நுண்ணறிவு பிரிவு) மற்றும் வருவாய், மாநகராட்சி, பொதுப்பணி உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE