வழக்கு நிலுவையில் இருந்தாலும் போலி பத்திரப்பதிவு ரத்து கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் தரலாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு புகார் கொடுக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 9 பத்திரங்கள் போலியானவை என்று அறிவித்து, அவற்றை ரத்து செய்யுமாறு கோரி நடேசன் என்பவர் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், இந்த ஆவணங்கள் உண்மையானவையா என்பது குறித்து தகுந்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹரிநாத் என்பவருக்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஹரிநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘இதுதொடர்பாக நடேசன் தொடர்ந்துள்ள வழக்கு, சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், ‘‘பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மோசடியானவையா என்பது குறித்து விசாரிப்பதற்கு மாவட்ட பதிவாளருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அதன்படி, மனுதாரரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியதில் எந்த சட்டவிரோதமும் இல்லை’’ என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், மோசடி ஆவணங்கள் மற்றும் போலி பத்திரப்பதிவு குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது.

மாவட்ட பதிவாளரின் நோட்டீஸுக்கு மனுதாரர் இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்.

இருதரப்பிலும் மாவட்ட பதிவாளர் கருத்துகளை கேட்டு, இதுதொடர்பாக 12 வாரங்களில் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE