தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 28-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வாட்டி வதக்கும் இந்த வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர் பாலாஜி சில யோசனைகளை வழங்கியுள்ளார்.
காற்றோட்டமான ஆடைகள், நீர்ச்சத்து நிறைந்த உணவு, சரியான நேரத்தில் விளையாட்டு என பட்டியலிட்டுள்ளார் குழந்தைகள் நல மருத்துவர் பாலாஜி.
வாட்டும் வெயிலும் இயற்கையே. இயற்கையை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால், அதன் சீற்றத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
அந்த வகையில் வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு நோய் ஏற்படாமல் நம்மால் காப்பாற்ற முடியும்.
காற்றோட்டமான ஆடைகள்..
பள்ளிக்கு அன்றாடம் சீருடையில் செல்லும் குழந்தைகளுக்கு விதவிதமான ஆடைகளை அணிவித்துப் பார்க்க ஆசையிருக்கலாம். அதற்காக பட்டாடைகளையும் வெல்வெட் ஆடைகளையும் வெயில் காலத்தில் உடுத்தக்கூடாது. பருத்தி ஆடைகளே இந்த வெயிலுக்கு உகந்தது. அதுவும் இறுக்கமாக இல்லாமல் சற்றே தளர்வாக ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
மருத்துவர் பாலாஜி
உணவில் கட்டுப்பாடு தேவை
எண்ணெயில் பொரித்த காரமான உணவு வகைகள் கூடாது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், மோர், பழச்சாறு, பழங்கள் ஏற்புடையது. கூழ் வகைகள் உட்கொள்ளலாம். சாப்பிடும் முன் கைகழுவும் பழக்கத்தால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்களை தவிர்க்க முடியும்.
தடுப்பூசிகள் அவசியம்
வெயில் காலத்தில் அம்மை நோய்களும், காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் குழந்தைகளை அதிகம் தாக்கும். அம்மை நோய்களுக்கு தடுப்பூசி இருப்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம். தேவையற்ற அசவுகரியங்களை இதனால் தடுக்கலாம்.
வியர்வை நல்லது..
குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் இந்த வெயில் காலத்தில் இருமுறை குளித்து உடல் வெப்பத்தை குறைக்கலாம். சாதாரண சோப்பு மட்டுமே போதுமானது. குளித்த பிறகு பவுடர் போடுவதை தவிர்க்க வேண்டும். நம் சருமத்தில் சிறிய நுண் துளைகள் இருக்கும். நாம் வியர்க்குரு பவுடர் போடுவதால் அந்தத் துகள்கள் மூடப்படும். இதனால் வெப்பம் வெளியேறாமல் சரும நோய்கள் ஏற்படும். வியர்வை வெளியேறுவது நல்லது. அதை தடுக்கும் வகையில் பவுடர், சந்தனம், வாசனை திரவியங்கள் என எந்தப் பூச்சும் கூடாது.
ஏ.சி.யில் தூங்குபவரா நீங்கள்?
குளிர்சாதனம் ஆபீஸ் முதல் வீடுவரை ஆக்கிரமித்திருக்கிறது. குளிர்சாதனம் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதை சீரான வெப்பநிலையில் இயக்க வேண்டும். நேடியாக ஏசி காற்று முகத்தில்படும்படி படுக்க வேண்டாம். குழந்தைகளைப் பெரும்பாலும் ஏசி காற்றுக்கு பழக்கப்படுத்தாமல் ஜன்னலை திறந்துவைத்து மின்விசிறியைப் பயன்படுத்துவது நல்லது.
வெயிலோடி வெளியாடி..
வெயில் காலம்தான் குழந்தைகளுக்கு விடுமுறை காலமாக இருக்கிறது. அவர்கள் விளையாட்டுக்குத் தடை போட முடியாது. ஆனால், கத்திரி வெயில் காலத்தில் காலை 9 மணிக்கு மேல் வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது. அதேபோல், மாலை 5 மணிக்கு மேல்தான் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
பச்சிளங் குழந்தைகளை எப்படி பராமரிப்பது?
பச்சிளங் குழந்தைகள் வீட்டில்தான் இருக்கப்போகிறார்கள் என்பதால் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. 6 மாதம் வரை இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பிக்கும்போது இந்த வெயில் காலத்தில் பழச்சாறு கொடுக்கலாம். இந்தக் குழந்தைகளுக்கும் பருத்தி ஆடையே சிறந்தது. குளியலுக்குப் பின்னர் பவுடர் போடுவதை தவிர்த்துவிடவும்.
இவ்வாறு மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago