வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர், வஉசிக்கு சென்னையில் ரூ.95 லட்சத்தில் சிலைகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.95 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் சிலைகள் மற்றும் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த செக்கு மற்றும் அவரது மார்பளவு சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், கிண்டியில் உள்ளகாந்தி மண்டப வளாகத்தில் ரூ.18 லட்சத்தில் வீரபாண்டியகட்டபொம்மன் சிலையும், ரூ.34 லட்சத்தில் மருதுபாண்டியர்களின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ரூ.43 லட்சம் மதிப்பில், வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வஉசியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

2021-22-ம் ஆண்டுக்கான செய்தி, மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இந்த திருவுருவச்சிலை கள் திறக்கப்பட்டன.

மேலும், வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி, 2021-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட 14 அறிவிப்புகளில், சென்னை காந்திமண்டபத்தில் உள்ள, வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக் கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அவரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மு.பெ.சாமி நாதன், மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா, துணை மேயர்மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா.செல்வராஜ், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE