முதல்வர் வருகை எதிரொலி: சேலத்தில் இலவச வேட்டி-சேலை விநியோகம் ஜரூர்

By வி.சீனிவாசன்

சேலம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகையை முன்னிட்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி-சேலைகள் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருவதால், ஏழை, எளிய மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 1,156 முழுநேர ரேஷன் கடைகளும், 448 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 1,604 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள், ஏஏஒய் அட்டைகள், சர்க்கரை விருப்ப அட்டைகள், காவலர் அட்டைகள், வன காவலர் அட்டைகள் உள்பட 11 லட்சத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, அரசின் சிறப்பு திட்டங்கள் மூலம் பொங்கல் பரிசு தொகை ரூ.ஆயிரம் மற்றும் பரிசு தொகுப்பாக கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும், கரோனா நிவாரண நிதி என ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலை, கரும்பு, சர்க்கரை, பரிசு தொகை ரூ.ஆயிரம் உள்ளிட்டவை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது.

இதில் இலவச வேட்டி-சேலை தவிர்த்து பரிசு தொகை, பரிசு தொகுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு மாதம் கடந்தும், இலவச வேட்டி-சேலை ரேஷன் கடைகளில் வழங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது, சேலம் மாவட்டத்தில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தில் மண்டல அளவிலான அரசு நிர்வாக செயல்பாடுகள், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் வருகை புரிகிறார்.

முதல்வர் சேலம் வருகையின் எதிரொலியாக கடந்த மூன்று தினங்களாக சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி-சேலைகள் ஜரூராக வழங்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் வருகையால் ஒரு மாதம் கடந்து சேலம் மாவட்டம் முழுவதும் இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்று வருகின்றனர்.

தற்போது, முதல்கட்டமாக சேலம் தாலுகாவில் 82 ஆயிரம் இலவச வேட்டி-சேலைகள் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மேலும் 70 ஆயிரம் இலவச வேட்டி-சேலைகள் தருவித்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு முழுவதுமாக வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE