மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7,301 பேரை தேர்வு செய்வதற்கான குரூப்-4 தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், பணியிடங்களின் எண்ணிக்கை 9,801 ஆக உயர்த்தப்படுவதாகவும், பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

அதேவேளையில், குரூப்-4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய அளவில் அனைத்து தேர்வாணையங்களால் நடத்தப்பட்ட தேர்வுகளில் மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு குரூப்-4 தேர்வு ஆகும். 2014 முதல் 2019 வரை சுமார் 10 லட்சம் முதல் 17 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். ஆனால், கடந்த ஆண்டு 18 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகமான வேலை உள்ளது.

மேற்கண்ட காரணங்கள் மற்றும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு வகையான தேர்வுகள் மற்றும் துறைத் தேர்வுகளை நடத்தி வருவதால், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடைவிடாமல் பணியாற்றி, தேர்வின் அனைத்து முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எந்த வித புகார்களும் இடம் அளிக்காமல் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும்.

ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வரும் அடிப்படை ஆதாரம் இல்லாத தகவல்களை பொருட்படுத்த வேண்டாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE