“மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அழுத்தம்” - மக்களவையில் மத்திய அரசு மீது நவாஸ் கனி குற்றச்சாட்டு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) எம்.பியான கே.நவாஸ் கனி உரையாற்றினார். அப்போது அவர், மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தினார்.

இது குறித்து ராமநாதபுரம் தொகுதி எம்.பியான கே.நவாஸ் கனி ஆற்றிய உரையில் பேசியது: ''குடியரசு தலைவர் ஒன்றிய அரசின் எண்ண ஓட்டத்தை தன்னுடைய உரையில் பிரதிபலித்தார். அதேபோன்று ஒவ்வொரு மாநில ஆளுநர்களும் மாநில அரசின் கொள்கைகளை திட்டங்களை பிரதிபலிக்கும் வண்ணம் மாநில அரசு தயாரித்த உரையினை சட்டமன்றத்தில் உரைக்க வேண்டும். அப்போதுதான் அது ஜனநாயக மரபுகளுக்கு வலு சேர்க்கும்.

ஆனால், தமிழ்நாடு உட்பட பாஜக ஆட்சி செய்யாத பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களின் மூலம் ஒருவித அழுத்தத்தை மாநில அரசுகளுக்கு கொடுக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு மாபெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஜனநாயக மரபுகளை தகர்க்கும் ஆபத்து மிகுந்தது. இந்த ஆபத்தை தடுக்க, குடியரசுத் தலைவர் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களுக்கு வலியுறுத்தல்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவரின் உரையில் நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பெருமிதத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகிய பூந்தோட்டமே இந்தியா என்று நாம் காலம் காலமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக நம்முடைய நாட்டை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் அந்த பன்முகத்தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு விட்டதோ என்று அச்சம் எழுகிறது. அந்த அளவிற்கு இந்த அரசு 'ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே மதம்' என்று பன்முகத்தன்மைக்கு எதிரான மிகப்பெரிய விவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. 75 ஆண்டு கால சுதந்திர பெருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 75 ஆண்டு கால சுதந்திர இந்திய தேசத்தை பன்முகத்தன்மை உள்ள இறையாண்மை மிக்கது நம்முடைய தேசம்.

தற்போது இது, பவளவிழா காணும் இந்த வேலையில் அந்த பன்முகத்தன்மைக்கு மிகப் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தும் வண்ணம் இதன் அரசனுடைய செயல்பாடுகள் அமைகிறது. அதன் ஆபத்தை உணர்ந்து நீங்கள் இந்த தேசத்தின் உணர்வையும் வரலாற்றையும் கலாச்சார பாரம்பரியத்தையும் மனதில் ஏந்தி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது சுதந்திர நாடு ஜனநாயக நாடு இங்கு மக்கள் தான் எஜமானர்கள் அவர்கள் மீது எதையும் எவரும் திணிக்கவோ வற்புறுத்தவோ முடியாது. எங்களுக்கு ஒன்றை வேண்டாம் என்று கூறும் பொழுது அதனை திணிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

அது தான் சுதந்திர தேசத்தின் அடிப்படை. ஒருவர் இந்த மொழியில் தான் பேச வேண்டும், இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று திணிப்பது சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மற்றும் ஒரு அடிப்படை கருத்து சுதந்திரம். விமர்சனங்களுக்கு அஞ்சக்கூடிய அரசாக இந்த அரசை நாம் பார்க்க முடிகிறது. பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்திற்கு தடை விதித்து கடும் நெருக்கடிகளை கொடுத்த இந்த அரசுதான் 'காஷ்மீர் பைல்ஸ்' என்ற திரைப்படத்தை ஊக்குவித்தது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பல மாநிலங்களில் பாரதிய ஜனதாவின் முதல்வர்கள் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தை பார்ப்பதற்கு விடுமுறை கொடுக்க வேண்டும் பள்ளிகள் தோறும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், தற்போது நீங்கள் பிபிசியின் ஆவணப்படத்தை தடை செய்கிறீர்கள். குடியரசு தலைவர் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, இன்னும் 25 ஆண்டுகளில் நாம் மாபெரும் உயரத்தில் இருப்போம் என்றெல்லாம் தங்களுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்கள். நீங்கள் அரியணையில் ஏறும் பொழுது எத்தனையோ வாக்குறுதி அளித்தீர்கள்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றீர்கள், இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றீர்கள், நாட்டின் பொருளாதாரம் இமைய உயரத்தை அடையப்போகிறது என்றீர்கள் இப்படி வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என்று பேசி ஆட்சியில் அமர்ந்தீர்கள் இதில் ஏதாவது ஒன்றிலாவது தன்னிறைவு அடைய முடிந்ததா? குடியரசு தலைவரின் உரையில் பல்வேறு ஒன்றிய அரசின் திட்டங்களை குறிப்பிட்டார்கள். அனைத்து திட்டங்களின் பெயரிலும் பிரதம மந்திரி இருந்தார். ஆனால் இன்னமும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முழுமையான பலன் தராத திட்டங்களாகவே இருக்கின்றன.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் நீங்கள் தரும் நிதி போதுமானதாக இல்லை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பிரதம மந்திரி தேசிய பேரிடர் நிவாரண நிதியில் மருத்துவ செலவுகளுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் நீல அகல வரைவுகளை எல்லாம் தகர்த்தி பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கிராமங்களுக்கு சாலைகளை வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இவை எல்லாம் கோரிக்கைகளாக மட்டுமே இருந்து வருகிறது. எப்போது இந்த அரசு இவற்றையெல்லாம் செவிமடுக்க போகிறது. உலக நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்கப் போகிறது என்று பெருமிதம் கொள்கிறோம். உலக நாடுகளுக்கு மத்தியில் நம்முடைய நாடு பெருமிதத்தோடு உயர்ந்து நிற்பது நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தான். ஆனால் அண்டையில் இருக்கும் நம்மை விட மிகமிக சிறிய நாடு இலங்கை இடம் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பதற்கு இன்னாள் வரை ஒரு நிரந்தர தீர்வை காண முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம் என்ற உண்மையையும் இந்த அரசு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

பலமுறை இதே அவையில் பேசியிருக்கிறேன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். எங்களுடைய பகுதிகளின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் படகுகள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வளவு பெரிய நாடு நாம் ஆனால் ஒரு சிறிய அண்டை நாட்டுடன் ஒரு பேச்சு வார்த்தையை நடத்தி நம்முடைய மீனவர்களை பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதை எண்ணி எப்படி பெருமிதம் கொள்ள முடியும் என்ற வருத்தத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இன்று நீங்கள் எங்களுக்கு பதில் உரைக்க மறுத்தாலும் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தில் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தொடர்ந்து இரண்டு முறை உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்களை மீண்டும் ஒருமுறை நீங்கள் சந்திக்க வேண்டும் அப்போது அவர்கள் உங்களுக்கு தகுந்த பதிலை வழங்குவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் உங்களுடைய வளர்ச்சியை காட்டுங்கள் என்பதை வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE