கும்பகோணம் | காதலர்களுக்கு திருமணம் செய்ய கோயில் முன் திரண்ட இந்து அமைப்பினர்: தடுத்த காவல்துறை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் காதலர் தினத்தை யொட்டி காதலர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ், மாவட்டத் தலைவர் ரவி, மாவட்ட அமைப்பாளர் அரவிந்த், பூசாரி பேரவை மாவட்ட தலைவர் கார்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா மாநிலப் பொதுச் செயலாளர் கா.பாலா தலைமை வகித்தார்.இவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் வந்திருக்கும் காதலர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் வகையில், சீர்வரிசை, தாலி, புத்தாடைகள், தாம்பூலங்கள், தேங்காய், பழம், பூ உள்ளிட்ட மேளதாளத்துடன் கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.

மேலும், ஆபாசமாக, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் காதலர்களுக்குத் திருமணம் செய்து வைப்போம், ஆபாச காதலைத் தடுப்போம், தெய்வீக காதலை போற்றிடுவோம் என முழக்கமிட்டபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீஸார், ”காலை முதல் காதலர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை, நீங்களும் உள்ளே செல்ல அனுமதியில்லை” எனக் கோயிலின் கதவினை தாழிட்டனர். பின்னரும் இந்து மக்கள் கட்சியினர் அங்கேயே சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE