எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்திருக்கிறது என்னுடைய பாணி: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: தன்னுடைய பாணி எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்துள்ளதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டுவோம் என்றும் ‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நடப்பு நிகழ்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் ‘உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரின் இரண்டாவது பாகம் இன்று (பிப்.14) வெளியானது. அதிலிருந்து சில கேள்வி பதில்கள்.

அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா?

சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தைத் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்குப் பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள். இராமநாதபுரத்தைச் சேர்ந்த பெரியவர், 92 வயதான பாலகிருஷ்ணன், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார்.

தன் வாழ்நாளெல்லாம் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்தச் செய்தியைப் பாத்து நெகிழ்ந்து போனேன். இதைப் பலரும் பின்பற்ற வேண்டும். மிசாவில் அரசியல் கைதியாக நான் இருந்தபோது, நிறைய புத்தங்களைப் படிக்கும் வாய்ப்பு சிறைச்சாலையில் கிடைத்தது. அரசியல், வரலாற்று புத்தகங்களை தாண்டி நிறைய நாவல்களையும் படித்தேன். சிறைச்சாலைத் தனிமையைப் போக்க நல்ல நண்பன் புத்தகங்கள்தான்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்‘ என்கிற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்த ஆய்வின் அனுபவமும், தாக்கமும் எப்படி இருந்தது?

வேலூர் புறநகர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்குச் சென்று காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தேன். அதேபோல மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் மையத்தையும் சென்று பார்த்தேன். உணவு தரமாக தயார் ஆகிறதா, உரிய நேரத்துக்கு கொண்டுபோய்க் கொடுக்கப்படுகிறதா என்று பார்த்தேன். சாப்பிடுகிற உணவு சுவையாவும், சூடாவும் இருப்பதாகப் பள்ளிக் குழந்தைகள் சொன்னார்கள். இதைக் கேட்டபோது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதிகாரிகள், அலுவலர்களோடு இரண்டு நாட்கள் அமர்ந்து, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிற அனைத்துப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தேன். அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில இடங்களில் சுணக்கம் இருந்தாலும் – அதுவும் அன்று முதல் சரி செய்யப்பட்டுவிட்டது.

யார் மேலேயும் நம்பிக்கை இல்லாமலோ இந்த ஆய்வுத் திட்டத்தை நான் தொடங்கவில்லை. எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்கிற மனநிறைவை நான் அடைவதற்காகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். வருகிற 15,16 தேதிகளில் சேலத்துக்குச் செல்கிறேன். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன். இன்னும் திட்டங்கள் எவ்வாறு சிறப்பாகக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு.

புதுமைப் பெண் - கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்தத் திட்டத்தின் பயனை மாணவிகள் உணரத் தொடங்கி இருப்பதாகக் கருதுகிறீர்களா?

நிச்சயமாக கருதுகிறேன்! 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவிகள், உயர்கல்விக்கு வந்தால், அவங்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற மகத்தான திட்டம் இது. முதலில், 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் இந்தத் தொகையைப் பெற்றார்கள். பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடந்த இரண்டாம் கட்டத் தொடக்க விழா மூலமாக மேலும் 1 லட்சம் மாணவிகள் பயன்பெறப் போகிறார்கள். உதவித்தொகை பெற வந்த மாணவிகளின் முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தேன்.

12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்த முடிவு செய்துவிட்டாராம் திருத்தணியைச் சேர்ந்த மகாலட்சுமி.குடும்பச் சூழல் காரணமாக பணம் செலவு செய்ய முடியாத நிலை இருந்திருக்கிறது. அரசாங்கமே ஆயிரம் ரூபாய் தருவதை தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அடம்பிடித்து, இப்போது கல்லூரியில் சேர்ந்திருப்பதாக மகாலட்சுமி பேட்டி கொடுத்திருக்கிறார்.

வெள்ளாத்தூரைச் சேர்ந்த சுல்தானா பர்வீன் என்கிற மாணவி, ஓராண்டாகக் கல்லூரிக்கு போகவில்லை. இந்தத் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன்பிறகுதான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். அவருக்கும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இவ்வாறு எத்தனையோ மாணவிகளின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது இந்த திட்டம். தலைமுறை தலைமுறைக்கும் இது பயனளிக்குற திட்டமாக அமையப் போகிறது.

பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துதான், திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்று, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறாரே?

தூத்துக்குடியில் போராடியவர்களைத் துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு, 'டிவியைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பொய் சொன்னாரே அந்த பழனிசாமியா? அவர் அப்படித்தான் பேசுவார்! அளித்த வாக்குறுதிகளில் 85 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். முன்பு சொன்ன புதுமைப் பெண் திட்டம் என்பது நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதது. ஓரிரு திட்டங்கள் பாக்கி இருக்கிறது. அது எல்லாத்தையும் வருகிற ஓராண்டிற்குள் நிறைவேற்றிக் காட்டுவோம். நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன்.

இரட்டை இலைச் சின்னம் அதிமுக.-விற்கு கிடைத்துவிட்டதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு சாதகம் என்கிற கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல், இவ்வாறு இதற்கு முன்னர் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்ட சின்னம்தான் இரட்டை இலை என்பதை மறந்துடக் கூடாது.

ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டது. ஏட்டிக்குப் போட்டி என்ற தமிழக அரசியலில் இருந்து விலகி - ஆக்கப்பூர்வமான அரசியல் நடத்துவதற்கு முயன்றுள்ள நீங்கள், அதில் வெற்றி பெற்றிருப்பதாக கருதுகிறீர்களா?

செயல் - அதுவே சிறந்த சொல் என்று நினைக்கக் கூடியவன் நான். ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளாக இருந்தால், எதையும் செயல்படுத்தக் கூடியவன் நான். அவதூறுகள், பொய்கள், விதண்டாவாதங்களுக்குப் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்கள் என்னை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அவங்களுக்கான முழு நன்மைகளையும் எனது ஆட்சிக்காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற ஒன்றே எனது இலக்கு.

தங்களது இருப்பைக் காண்பித்துக் கொள்வதற்காக வீண் அவதூறுகளை யார் சொன்னாலும் அதற்கு நான் பதில் அளிப்பது இல்லை. அதைப் படிக்கிறேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வேன். அடுத்த நொடியே, ஆக்கப்பூர்வமாக அடுத்து என்ன செய்யலாம் என்கிற சிந்தனைக்குள் நான் சென்று விடுவேன். என்னுடைய இந்தப் பாணி எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்திருக்கிறது. அவர்களுக்கு அரசியல் செய்ய நான் வாய்ப்பு அளிக்கவில்லை என்பதுதான் அவர்களது அதிகப்படியான கோபம் என்று நினைக்கிறேன். ஆக்கப்பூர்வமான அரசியல் என் பாணி. அவதூறு அரசியல் அவர்கள் பாணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்