சென்னை: உலக தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
அதன் விவரம் வருமாறு:
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: இலங்கை தமிழர் நலன் காப்பதில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு உண்டு. இலங்கைத் தமிழர்களுக்காக எம்ஜிஆர் செய்த உதவிகள் உலகறிந்தது. இலங்கை தமிழர் நலன் காக்க பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றால் எங்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கே மகிழ்ச்சியைத் தரும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சிதான். மீண்டும் வந்தால் நான் நேரில் சந்திப்பேன்.
பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி: பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி, அன்றைய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தால், உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டிருந்த அவரது பெயரை நீதிமன்றமும் வழக்கில் இருந்து நீக்கியது. 14 ஆண்டுகள் கழித்து அவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியை வெளியிடுவது முறையான செயலா என்பதை பொறுப்புள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். இலங்கை
தமிழ் மக்கள் நலனில் சிறிதளவேனும் அக்கறை இருந்தால், இதுபோன்ற செய்திகளை வெளியிட மாட்டார்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள், பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்: ஈழத் தமிழர் நலனில் நிறைய பங்களிப்பை செய்தவர் நெடுமாறன். அதற்காக பல நெருக்கடிகளை சந்தித்தார். அவர் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவரும் கூட. அவர் தற்போது கூறி இருப்பது புதிதில்லை. இலங்கை அரசு பிரபாகரனை கொன்றுவிட்டதாக அறிவித்தபோதே, உயிரோடு இருப்பதாக நெடுமாறன் கூறினார். மேலும் அவரது அறிக்கையில் இலங்கைத் தீவில் சீனா காலூன்றல் குறித்து கூறியிருக்கிறார். அவர் பிரபாகரன் குறித்து கூறியதை விட, சீன வருகை குறித்து இந்திய அரசுக்கு சொல்லும் கருத்துதான் மேலோங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று வீரமாக போரிட்டவர்தான் தலைவர் பிரபாகரன். எனது தம்பி பாலச்சந்திரனை சாகக் கொடுத்துவிட்டு, தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு சென்ற கோழை என்று நினைக்கிறீர்களா? போர் முடிந்து 15 ஆண்டுகள் பேரழிவை சந்தித்த பிறகு, அவர் பாதுகாப்பாக இருப்பார் என்று நினைக்கிறீர்களா? ஒரு நாள் மக்கள் முன்பு தோன்றுவார் என்று சொல்கிறார்கள். அவர் தோன்றும்போது பேசுவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: பழ.நெடுமாறன் ஒரு மூத்த அரசியல் தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர். எனவே, அவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்த கருத்தை தவறாகவோ, மிகைப்படுத்தியோ கூறியிருக்க மாட்டார். எனவே, அவர் கூறியது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இக்கட்சிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: பழ. நெடுமாறன் ஒரு மகிழ்ச்சியான, நல்ல செய்தியை சொல்லியிருக்கிறார். என்னை பொறுத்தவரை அது உண்மையாக இருக்க வேண்டும். பிரபாகரன் மக்கள் முன்பு தோன்ற வேண்டும் என்பது என்னுடைய ஆவல். அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நெடுமாறன் கூறியது மகிழ்ச்சி தருகிறது.
இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்: பிரபாகரனின் உடல் இதுதான் என இலங்கை அரசு இதுவரை நிரூபிக்கவில்லை. பழ.நெடுமாறனின் கருத்து புறக்கணிக்கக் கூடிய கருத்து அல்ல.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி: பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும். இவ்வாறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டே சொன்ன காங்கிரஸ் மூத்த தலைவர்: பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த ஆண்டே காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி கூறியிருந்தார். தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, கடந்த ஆண்டு மே மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: நந்தி கடலில் மரணமடைந்து இரவு முழுவதும் சடலமாக பிரபாகரன் மிதந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. அப்படி மிதந்திருந்தால், அந்த சடலத்தின் கண்கள் மீன்களால் சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த சடலத்தின் கண்கள் திறந்த நிலையில் தெளிவாக இருந்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விடுதலைப் புலிகள் யாரும் தங்கள் சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களிடம் இல்லை. ஆனால், இலங்கை ராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது. அதனால் அது பிரபாகரனே இல்லை. அந்த ஏற்பாட்டை செய்தவர்கள் ஏதோ ஒரு நோக்கத்துக்காக செய்துள்ளனர். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். அவர் உயிரோடு ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இதை என்னிடம் சொன்னவரும் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கிறார். அவர் எப்போதாவது என்னை தொடர்புகொண்டு பேசுவார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார்.இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியை தொடர்புகொண்டு கேட்டபோது, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உறுதிபட தெரிவித்தார். அடுத்து என்ன நடக்கும் என கேட்டதற்கு, ‘‘ஊகத்தின் அடிப்படையில் எதையும் கூற விரும்பவில்லை’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago