சேலம் | பொது வழிப்பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்த கிராம மக்கள்

By வி.சீனிவாசன்

சேலம்: காடையாம்பட்டி அருகே பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் கோபம் அடைந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஓடலூர் ஏரி வாய்க்கால் கரைமேல் நடைபாதையாகவும், மயானத்துக்கு செல்லும் வழியாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு உண்டான பொதுவழி பாதையை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளதால், நடைபாதை வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, காடையாம்பட்டி, கோட்டமேடு பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கைக்குழந்தைகளுடன் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்துடன் வந்தனர். ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், பொதுமக்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

பொது வழிப்பாதையை மீட்கவில்லை என்றும், இல்லையெனில் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் அவர்களை சமாதானம் செய்து, மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு அளிக்க சிலரை மட்டும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE