“சில திட்டங்களில் தொய்வு, சுணக்கத்தை கவனித்தேன்” - அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி

By செய்திப்பிரிவு

சென்னை: "பொதுவாக, திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். அதிகாரிகள் கவனித்துப் பேணிக் காத்தால், அவை வளரும். அதிகாரிகள் கவனிக்கத் தவறினால், அவை மெலியும். ஆனால், நமது மாநிலத்தில், பல துறைகளில், பல திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அத்துடன் தனது அதிருப்தியையும் அவர் பதிவு செய்தார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திவரும் முத்திரைப் பதிக்கும் முத்தான திட்டங்கள் (Iconic Projects) தொடர்பான முதலாவது ஆய்வுக் கூட்டம் கடந்த பிப்.9 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் 13 துறைகள் தொடர்பான முத்தான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, திங்கட்கிழமை (பிப்.13) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முத்தான திட்டங்கள் தொடர்பான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இன்றைய ஆய்வுக் கூட்டத்தில், எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள், போக்குவரத்து, சிறப்பு முயற்சிகள், பொதுப்பணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், நீர்வளம் மற்றும் மருத்துவம்–மக்கள் நல்வாழ்வு ஆகிய 14 துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்தத் திட்டங்கள் குறித்து, முதலமைச்சர் நிலையில் ஏன் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இவை அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திடும் திட்டங்களாகும். இவற்றில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும், தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வுக் கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

இரண்டாவதாக, முக்கியத் துறைகளைச் சார்ந்த செயலாளர்களாகிய நீங்கள் அனைவரும், அரசின் பெருந்திட்டங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஒரு திட்டத்தின் செயலாக்கத்திற்கு, மற்றொரு துறை தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்கி, தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து, முன்னேறிச் செல்ல பாதை வகுக்க வேண்டும். அதற்கு உங்களின் முழு ஒருங்கிணைந்த பங்களிப்பு தேவை. அதற்காகவும்தான் இந்த ஆய்வுக் கூட்டம்.

அரசு நிர்வாகம் என்பது, நாம் அனைவரும் சேர்ந்திழுக்கும் தேராகும்; அதை விரைவாகச் செய்தால், நிர்வாகம் நேராகும். தேர் நிலையிலேயே இருப்பதற்காக செய்யப்பட்டதல்ல – திட்டங்கள், காகிதத்தில் இருப்பதற்காக வரையப்பட்டதல்ல.நீங்கள் செயல்வீரர்களாக செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சார்-நிலை அலுவலர்களது பணிகளை நீங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள்.தொடர்ச்சியான ஆய்வுகளே, தொய்வில்லாத நிர்வாகத்தை உருவாக்கும்.

சாதாரண நன்மை அளிக்கும் திட்டங்களைக்கூட முழுமையாக, குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தும் போது அது முழு நன்மையை ஏற்படுத்தி விடும்.பெரிய நன்மை அளிக்கும் திட்டங்களை அரைகுறையாகச் செயல்படுத்தும் போது சிறு நன்மைகூட விளையாமல் போய்விடுவதும் உண்டு.இதற்கு ஒரேயொரு உதாரணம், கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட உழவர் சந்தைகள். இவை அனைத்துமே நிர்வாகத்தின் கையில் அதாவது, உங்கள் கையில் தான் இருக்கிறது.

அதனால்தான் பொதுவாக, திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். அதிகாரிகள் கவனித்துப் பேணிக் காத்தால், அவை வளரும். அதிகாரிகள் கவனிக்கத் தவறினால், அவை மெலியும். ஆனால், நமது மாநிலத்தில், பல துறைகளில், பல திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறான செயல்பாடுகளே, மக்களுக்கான பொற்காலமாக அமையும். அத்தகைய பொற்காலத்துக்கான அடித்தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.

இன்றைய ஆய்வின்போது, பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படுவதை நான் கவனித்தேன். அந்தத் திட்டங்கள் தொடர்பான துறைச் செயலாளர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், சில திட்டங்களில் காணப்படும் தொய்வினையும், சுணக்கத்தையும் கவனித்தேன். அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கிறது. அவை என்னென்ன திட்டங்கள் என தனிப்பட்ட முறையில் நான் குறிப்பிட விரும்பவில்லை. அதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அவற்றை நிறைவேற்றுவதற்கு எந்தளவு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த காலவரையறைக்குள் அவற்றை முழுமையாக நிறைவேற்றிட சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்களைக் நான் கேட்டுக் கொள்கிறேன்.

திட்டங்களை வகுக்கவும், நிறைவேற்ற வழிமுறைகளைச் சொல்லவும் துறைசாரா வல்லுநர் குழுவை நாங்கள் அமைத்திருக்கிறோம். அவர்களது ஆலோசனைகளை முழுமையாகப் பெறுங்கள். அவற்றைச் செயல்படுத்துங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

திட்டத்திற்கென அளிக்கப்பட்ட நிதியினை பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப முழுமையாகச் செலவிட்டு, பணியினைத் துரிதப்படுத்துங்கள்.இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான பணிகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை, அடுத்த ஆய்வுக் கூட்டத்தின்போது நிச்சயம் காண்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று அவர் பேசினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்