தமிழில் தீர்ப்பு எழுதும் காலம் விரைவில் வரும்: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா நம்பிக்கை

By செய்திப்பிரிவு

கேளம்பாக்கம்: தாய்மொழியிலே சிந்திப்போம், பேசுவோம், வழக்காடுவோம், நீதி வழங்குவோம், தமிழிலே தீர்ப்புரை எழுதும் காலம் விரைவில் வரும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை - கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த 9 முதல் 11-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில், மாநில அளவில், 22 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளை சேர்ந்த 66 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் நீதிமன்றத்தில் வாதாடுவதுபோன்று மாணவர்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இதில் வெற்றி பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா பங்கேற்றார். போட்டியில் முதலிடம் பெற்ற தேனி அரசு சட்டக் கல்லூரி, இரண்டாம் இடம் பிடித்த விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது.

மாநில அளவில் தமிழில் மாதிரி நீதிமன்ற போட்டிகள் தற்போதுதான் நடத்தப்படுகின்றன. இது மிகவும் ஆரோக்கியமான விஷயம். தமிழுக்கு நாம் செய்யும் தொண்டு மட்டுமின்றி தமிழ் வளர வேண்டும் என்ற அடிப்படைக் காரணமும் உள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற காரணம், இந்தியாவிலேயே முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது தமிழ்தான்.

திருக்குறளில் படிக்கப் படிக்க ஏராளமான நீதிக்கருத்துகள் உள்ளன. அதனால்தான் இங்குமதத்தை பரப்ப வந்த ஜி.யு.போப், தமிழின் தொன்மையையும், வளமையும் கண்டு வியந்து அந்த மொழியைக் கற்று திருக் குறளையும் மொழி பெயர்த்துச் சென்றார். உலகத்தின் பல்வேறு நாடுகளில் தாய்மொழியில்தான் நீதிமன்ற விவாதங்கள் நடைபெறுகின்றன.

உலகத்திலே ஒரு வல்லரசு நாடாக ஜப்பான் உருவாவதற்கு காரணம், அந்த நாட்டு மக்கள் சொந்த மொழியில் பேசுகிறார்கள். தாய்மொழியில் நாம் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்கும் பொழுதும், கலந்து ஆலோசிக்கும்போதும் பிரச்சினை வருவது கிடையாது. அவ்வாறு வந்தாலும் சாதாரண முறையில் நாம் தீர்வு காண முடியும்.

தீர்ப்புரைகளும் தாய்மொழியில்தான் எழுதப்படுகின்றன. நாமும் தமிழிலே வழக்காடுவோம், தமிழிலேயே சிந்திப்போம். தமிழில் தீர்ப்புரை எழுதும் காலம் விரைவில் வரும். தமிழில் வாதங்கள் வரத் தொடங்கினால் வழக்காடிகளே வாதிட்டு வழக்கில் வெற்றி பெறுவார்கள். இதன் காரணமாக அப்பீல் வழக்குகள் குறைந்து நீதிமன்றத்தின் சுமை குறையும்.

கீழமை நீதிமன்றங்களில் தமிழில் வாதாடி, தமிழில் தீர்ப்புரை பெறும் வழக்கம் இருந்தாலும் இவை உயர் நீதிமன்றத்திலும் வர வேண்டும். அழகைவிட அறிவே உயர்ந்தது. இந்த அறிவைப் பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் உயர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, கல்லூரி முதல்வர் கவுரி ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்