திருப்பத்தூர் | நாட்றாம்பள்ளி அருகே பட்டாசு கடை தீ விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே பட்டாசுக் கடையில் நேரிட்ட தீ விபத்தில் தந்தை, மகன் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்றாம்பள்ளி அடுத்த ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார்(45). இவர், நாட்றாம்பள்ளி அருகேயுள்ள புத்துக்கோயில் பகுதியிலும், இவரது தந்தை ராமமூர்த்தி வாணியம்பாடியிலும் பட்டாசுக் கடை நடத்தி வருகின்றனர்.

தந்தையும், மகனும்... இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று பட்டாசுக்கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, ஆம்பூர் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (57), ராமன்(37) ஆகியோர் பட்டாசு வாங்குவதற்காக, குமாரின் கடைக்கு வந்தனர். இதையடுத்து, குமாரும், அவரது மகன் தயாமூர்த்தியும்(12) கடையை திறந்து,பட்டாசு ரகங்களைக் காண்பித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடிக்க தொடங்கின. இதில், கடைக்குள் இருந்த குமார், தயாமூர்த்தி மீது தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள், கடையில் இருந்த பட்டாசு ரகங்கள் வெடிக்கத் தொடங்கி, கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

பட்டாசு வாங்க வந்த ராமன், வேலாயுதம் ஆகியோரும் காயமடைந்தனர். நாட்றாம்பள்ளி, வாணியம்பாடியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையில், தீக்காயமடைந்த நால்வரும் மீட்கப்பட்டு, நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே குமார், அவரது மகன் தயாமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். ராமன், வேலாயுதம் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரூ.6 லட்சம் பட்டாசுகள் சேதம்: இந்த விபத்தில் கடையில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான பட்டாசு முழுமையாக எரிந்து சாம்பாலனது. விபத்து குறித்து அம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். தீ விபத்து நேரிட்ட இடத்தில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் குமார்உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE