மாநகராட்சி முன்வராததால் மதுரை வைகை ஆற்றில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மாநகராட்சி தூர்வார முன்வராததால் தன்னார்வலர்கள் பொதுமக்கள் திரண்டு மதுரை வைகை ஆற்றில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி இன்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

மதுரை வைகை ஆற்றில் கடந்த காலத்தில் மாநகராட்சி நிர்வாகம் வாரம் ஒரு முறை அல்லது குறைந்தப்பட்சம் மாதத்தில் ஒரு முறையாவது மெகா தூய்மைப்பணி செய்தது. அந்த நிகழ்ச்சியின்போது கரையோரங்களில் வசிக்கும் மக்கள், குப்பை கொட்டுவோரிடம் மாநகராட்சி பணியாளர்கள் ஆற்றில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துவர். மாநகராட்சியின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்பார்கள். இதனால், அடுத்த தலைமுறையினருக்கும் வைகை ஆறு போன்ற நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வைகை ஆற்றில் மாநகராட்சி சார்பில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அன்றாட தூய்மைப்பணியிலும் மதுரை வைகை ஆறு சேர்க்கப்படவில்லை. இதனால், வைகை கரை வார்டுகளில் தினசரி தூய்மைப்பணியில் ஈடுபடும் தூய்மைப்பணியார்கள், ஆற்றில் இறங்கி அங்கு கொட்டும் குப்பைகள், பாலித்தீன் பைகளை அகற்றுவதில்லை. மேலும், ஆற்றில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும் மாநகராட்சி கண்டிப்பான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், இன்று வைகை நதி மக்கள் இயக்கத்தினர், பொதுமக்களை, பள்ளி மாணவர்களுடன் இணைந்து வைகை ஆற்றில் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகை ராஜன், தன்னார்வலர்கள் மணிகண்டன், செந்தில்குமார், ஆறுமுகம், ராஜவேலு, சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வைகை நதி ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வைகை ஆற்றில் குருவிக்காரன் சாலைப்பகுதியில் குப்பைகளை சேகரித்தோம். இந்த ஒரு பகுதியில் அரைமணி நேரத்திற்குள் 20 பண்டல்களில் நிலத்தில் மக்காத பாலித்தீன் பைகளை சேகரித்தோம். அப்படியென்றால், மதுரை முழுவதும் இந்த ஆற்றில் எவ்வளவு பாலித்தீன் குப்பைகள் பரவிகிடக்கும். இந்த பாலித்தீன் குப்பைகள், மண் வளத்திற்கும், நிலத்தடி நீர் செல்வதற்கும் மிகப்பெரிய தடையாக உள்ளது. நாங்கள் சேகரித்த பாலித்தீன் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தியாகராஜர் கல்லூரியில் உள்ள மறுசுழற்சி மையத்தில் ஒப்படைக்க உள்ளோம்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE