சென்னையில் போதை எதிர்ப்பு, போக்சோ சட்டம் குறித்து போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: பொதுமக்கள் - காவல் துறையினர் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், அவ்வப்போது குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் 164 குடிசை மாற்றுவாரிய பகுதிகளுக்கு காவல்துறையினர் நேற்று முன்தினம் சென்று, அங்கு வசிக்கும் மக்களிடம் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போதை எதிர்ப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இது தொடர்பாக உரிய அறிவுரைகள், ஆலோசனைகளையும் வழங்கினர். மேலும், பொதுமக்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், தீய பழக்கங்களுக்கு உள்ளாகாமல், நல்வழியில் செல்லவும் போலீஸார் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

அதேபோல, குழந்தைகள் பாதுகாப்பு, 18 வயதுக்குஉட்பட்ட பெண் குழந்தைகள்,பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்தும் மக்களிடம் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக, `முத்துவும் முப்பது திருடர்களும்' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு புத்தகங்களை, குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீஸார் வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE