பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 200-வது நாளை எட்டிய போராட்டம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில் இன்று (பிப்.11) அங்கு 200-வது நாளாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உட்பட 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலையம் ஏகனாபுரத்தை மையமாக வைத்து அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளதாலும், அந்த கிராமத்தில் மொத்தமாக நிலம் எடுக்கப்படுவதாலும் பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பது, விமான போக்குவரத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வது, மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையத்துக்கு இடையே உள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்வது தொடர்பாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (பிப்.11) 200-வது நாளாக விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. இந்த 200-வது நாள் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல் முருகன் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் இந்த போராட்ட நிகழ்விற்கு சென்று கொண்டிருந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனை, போலீஸார் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE