சேலம் | சிவராத்திரி விழாவை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு: குண்டு மல்லி கிலோ ரூ.1,600க்கு விற்பனை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து குறைவாக உள்ள சூழலில், சிவராத்திரி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,600 விலையில் விற்பனையானது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வஉசி பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. பூ மார்க்கெட்டுக்கு வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்து, விற்று செல்கின்றனர். வஉசி பூ மார்க்கெட்டில் வெளியூர், வெளிமாவடங்களை சேர்ந்தவர்கள் மற்றும் சேலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சுபமுகூர்த்த தினம், பண்டிகை, தைப்பூசம் விழாக்களை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்து இருந்தது. அப்போது ஒரு கிலோ குண்டு மல்லி பூ கிலோ ரூ.1400-க்கு விற்பனையானது. பின்னர், குண்டு மல்லி சற்றே விலை சரிந்து கிலோ ரூ.ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்நிலையில், சிவராத்திரி விழா மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு மீண்டும் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை நிலவரம் (ஒரு கிலோ): குண்டு மல்லி - ரூ. 1600, ஜாதிமல்லி - ரூ.1000, காக்கட்டான் - ரூ.450, மலைக்காக்கட்டான்- ரூ.360, அரளி - ரூ.80, செவ்வரளி - ரூ.150, ஐ.செவ்வரளி - ரூ.100, நந்தியாவட்டம் - ரூ.150, சி.நந்தியாவட்டம் - ரூ.200, சம்பங்கி - ரூ.80 சாதா சம்பங்கி-100 என்ற விலையில் விற்பனையானது.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் இருந்து குண்டு மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை கிலோ ஆயிரதம் விலைக்கு அதிகமாகவே விற்பனையாகி வருகிறது. பனி பொழிவால் செடியில் மொட்டுகள் உதிர்ந்து விடுவதால், உற்பத்தி குறைந்து, விலை ஏற்றம் நீடித்து வருகிறது. தற்போது, வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், வரும் வாரங்களில் பூக்களின் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளதாக வஉசி பூ மார்க்கெட்வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE