விருதுநகரில் மக்காச்சோளம் அறுவடை தீவிரம் - ‘குவிண்டாலுக்கு ரூ.2,400 வரை விலை’ என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கட்டுப்படியான விலை கிடைப்பதால் விவசாயிகள் மிகழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பரவலான மழை மற்றும் நீர் வரத்து காரணமாக வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நெல், பருத்தி, சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவை அதிக அளவில் பயிரிடப்பட்டன, விருதுநகர் மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது.

சாத்தூர், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டோருக்கும் அதிகமாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக மக்காசோள பயிரில் படைப்புழுத் தாக்குதல் அதிகமாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்டன.

ஆனால், இந்த ஆண்டு ஒரு சில இடங்களைத் தவிர படைப்புழுக்களின் தாக்குதல் குறைந்ததால் மகசூல் அதிகரித்துள்ளது. நெல் அறுவடையைத் தொடர்ந்து மாவட்டத்தின் பெரும் பான்மையான பகுதிகளில் தற்போது மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மக்காச்சோளத்திற்கு கட்டுபடியான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து, மக்காச்சோளம் அறுவடையில் ஈடுபட்டிருந்த அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், “கடந்த ஆண்டு மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ரூ.1,300-க்கு விலை போனது. இந்த ஆண்டு ரூ.2,300 முதல் ரூ.2,400 வரை விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு 20 முதல் 22 குவிண்டால்வரை விளைச்சல் கிடைத்துள்ளது. மக்காசோளத்தைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் வாடகைக்குக் கிடைக்கிறது. ஒரு குவிண்டாலுக்கு ரூ.80 கட்டணமாக பெறப்படுகிறது. இதன் மூலம் வயலிலேயே இந்திரத்தை கொண்டு வந்து மக்காச்சோளத்தை பிரித்தெடுக்க முடிகிறது.

இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தாலும் காட்டுப் பன்றிகளால் பயிர் சேதம் அதிகமாக உள்ளது. காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE