கருணாநிதி பேனா செய்தவை என்னென்ன? - பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மதுரையில் திமுக துணை அமைப்பாக இளைஞரணியை உருவாக்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதன் பிறகு திருச்சியில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் இளைஞரணிக்கு தலைவராக என்னை நியமிக்க வேண்டும் என அனைவரும் பேசினார்கள்.

வாரிசு அரசியல் என்ற அவப்பெயர் வரும் என இளைஞரணி பொறுப்பு எனக்கு தர தயங்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மேலும் இளைஞர் அணிக்கு ஒரு அமைப்பு குழுவை உருவாக்கினார். இதன்பிறகு திமுக இளைஞரணி அமைப்பாளராக நியமனமாகி படிப்படியாக உயர் பதவிக்கு வந்தேன்.

கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழகம் தலை நிமிர்ந்தது. கருணாநிதியின் பேனா பல முன்னோடி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனா தான் கருணாநிதி பேனா. டைடல் பார்க உருவாக்க கையெழுத்து இட்ட பேனா கருணாநிதி பேனா.

குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்ட உத்தரவிட்ட பேனா தான் கருணாநிதி பேனா. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்க காரணமாக இருந்தது பேனா தான் கருணாநிதி பேனா. தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா." இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE