சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான, தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை தயாரிக்க ஆலோசகரை தேடுவதற்கான ஒப்பந்த அறிவிப்பு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது, சரக்குகள் கையாளும் திறன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும், பொருளாதார திறன் மேம்பாட்டை கருதியும் சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பரந்தூரில், 4700 ஏக்கர் பரப்பில்,ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், தமிழகத்தின் பொருளாதார எதிர்காலம் கருதி பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அதாவது, நிலத்துக்கு உரிய மதிப்பு, வேலைவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்டவற்றை தெரிவித்து நிலத்தை எடுக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
இதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது. அதில் அதிகாரிகள் தற்போது அரசு நிலம் துறை மாற்றம், நில எடுப்புக்கான அடிப்படை கோப்புகளை தயாரித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இத்திட்டத்தை செயல்படுத்த பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) இத்திட்டத்துக்கான தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை அளிப்பதற்கு தகுதியான நிறுவனத்தை தேடி வருகிறது. இதுகுறித்த ஒப்பந்தப் புள்ளியை கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டது.
அதில், சென்னை அருகில் உள்ள பரந்தூரில் அமைய உள்ள புதிய கிரீன்பீல்டு விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆலோசகர்களை தேர்வு செய்ய டிட்கோவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில், டிட்கோ நிறுவனம், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான அனுமதிகளை பெற உதவி செய்யவும், விமான நிலையத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு தேவையான ஒப்பந்தப் பணிகளை மேலாண்மை செய்ய உதவி செய்யும் வகையிலும் விரிவான தொழில்நட்ப பொருளாதார அறிக்கையை தயாரித்து அளிக்க ஆலோசகரை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்த தேர்வில் பங்கேற்கலாம் என டிட்கோ மேலாண் இயக்குநர் அறிவித்திருந்தார்.
ஒப்பந்த அறிவிப்பு கால அவகாசம் கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் முடிவடைந்த நிலையில், போதிய நிறுவனங்கள் பங்கேற்காததால், முதலாவதாக பிப். 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாச காலத்திலும் போதிய நிறுவனங்கள் ஒப்பந்தம் கோராத நிலையில், தற்போது இரண்டாவது முறையாக வரும் பிப். 27-ம் தேதி வரை டிட்கோ நிறுவனம் நீட்டித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago