புதுச்சேரி | மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய, விடிய போராட்டம் - வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய, விடிய போராட்டம் நடந்து இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்ததால் அதில் ஈடுபட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டபோது தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுவை கிழக்கு கடற்கரை சாலை காமராஜர் மணிமண்டபம் எதிரே சாமிபிள்ளை தோட்டத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் புதிய மதுபானக்கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, கோவில், முக்கிய சந்திப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதி அரசியல் கட்சியினர், அமைப்புகள், இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மதுக்கடை எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி பலகட்ட போராட்டம் நடத்தினர். இதனால் மதுக்கடை திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மதுக்கடையை திறக்க ஏற்பாடுகள் நடந்தது. இதையடுத்து அப்பகுதிமக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். மதுக்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்ட களத்துக்கு திரும்பிய அவர்கள் மதுக்கடை முன்பு படுத்து விடிய, விடிய போராட்டம் நடத்தினர். இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்ததால் அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உழவர்கரை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையிலான கலால் துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அங்கிருந்தோர் ஏற்கவில்லை. மதுபான கடை உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து தாசில்தார்,காவல்துறை அதிகாரிகள் நடத்திய இரண்டு மணிநேர பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டுவிட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர்.

ஆனால் அதையும் மீறி பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் போலீஸார் போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்திற்காக போட்டிருந்த பேனர், சாமியானா ஆகியவைகளை கழற்றி நாற்காலிகளையும் போலீஸார் எடுத்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE