22% ஈரப்பத நெல் கொள்முதலை நிரந்தரமாக்குக: மத்தியக் குழுவிடம் டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதத்தில் கொள்முதல் செய்ய நிரந்தர அறிவிப்பை வெளியிட பரிந்துரை செய்ய வேண்டும் என நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

2.30 லட்சம் ஏக்கர் பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள், பருவம் தவறி பிப்.1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை பெய்த மழையால், சுமார் 2.30 லட்சம் ஏக்கர் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும், அறுவடை செய்து நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதமும் உயர்ந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமும், நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் ஈரப்பதம் தொடர்பாக கடிதம் எழுதினார்.

மத்தியக் குழு ஆய்வு: இதையடுத்து, சென்னை தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி.யூனுஸ், பெங்களூரு தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், ஒய்.போயா ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வியாழக்கிழமை (பிப்.9) காலை திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், பிற்பகல் தஞ்சாவூர் மாவட்டம் அருள்மொழிபேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டு வந்திருந்த நெல்லை ஆய்வு செய்தனர்.

விவசாயிகள் கோரிக்கை: தொடர்ந்து, நெல்மணிகளை ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்து சென்றனர். அப்போது விவசாயிகளிடம், எப்போது அறுவடை செய்யப்பட்டது, என்ன ரகம், எத்தனை நாளாக கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கிறீர்கள், பெயர், முகவரி ஆகியவற்றை கேட்டு அவர்களிடம் ஆய்வு செய்தமைக்கான ஒப்புதலையும் பெற்றுக் கொண்டனர்.

அப்போது, மத்தியக்குழுவினரிடம் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வெ.ஜீவக்குமார், செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், “குறுவை, சம்பா பருவங்களில் அறுவடை காலத்தில் மழை பெய்வதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. விவசாயிகள் கடுமையாக வியர்வை சிந்தி உழைத்து உற்பத்தி செய்த நெல்லை வேண்டும் என்றே யாரும் ஈரமாக்குவதில்லை, இயற்கையின் சீற்றங்களால் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, மத்திய அரசு நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக கொள்முதல் செய்ய நிரந்த உத்தரவை இட வேண்டும். இதற்கு நீங்கள் பரிந்துரைக்க வேண்டும்.

அதே போல் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு செலுத்திய சம்பா பருவ நெல்லுக்கான பயிர் காப்பீடு செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடை வழங்க பரிந்துரைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழையால் நெல் சாய்ந்து பாதிக்கப்படுவதால், அதற்கு ஏற்ற புதிய ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது: “பருவம் தவறிய மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் நெல் ஈரப்பதத்தில் தளர்வுகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதன்படி தமிழக அரசு கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு பிரபாகரன் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒவ்வொரு இடத்திலும் மூன்று மாதிரிகளை எடுத்து பரிசோதித்துள்ளனர்.ஆய்வு செய்த அறிக்கையினை ஒருங்கிணைத்து தலைமைக்கு அனுப்பி அதன் அடிப்படையில் அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE