சென்னை: 2023ம் ஆண்டுக்குள் அனைத்துத் சிறப்பு திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை பதிக்கும் திட்டங்கள் (Iconic Projects) தொடர்பாக இன்று (பிப்.9) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்," கடந்த இருபது மாத காலத்தில் எத்தனையோ நல்ல பல திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்தை வடிவமைப்பதில் தொடங்கி, இதனைச் செயல்படுத்துவது வரை- தினந்தோறும் கண்காணித்து அவற்றை ஆர்வத்தோடு செயல்படுத்தி வரக்கூடிய அனைத்து உயரதிகாரிகளுக்கும் என்னுடைய நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு என்பது முதல்வர் மட்டுமல்ல, அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் இணைந்ததே. இம்மூன்று பகுதிகளும் ஒன்றாக இணைந்து ஒருமுகப்பட்டுச் செயல்படுவதே நல்லாட்சியாக அமைந்திட முடியும். அத்தகைய நல்லாட்சியை நாம் நடத்தி வருகிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு இந்தக் காலகட்டமானது மனநிறைவை அளித்துள்ளது என்பதை வெளிப்படையாகவே உங்களிடம் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதை நோக்கமாகக் கொண்டே இந்தக் கூட்டத்தை இன்றைக்கு நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பத்தாண்டு காலம் பெருமளவில் ஒரு தொய்வு இருந்தது. அதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அந்தத் தொய்வை நீக்குவது மட்டுமல்ல, உயர்வை உருவாக்குவதுமான இரண்டு இலக்குகள் நமக்கு இருந்தது. அந்த இலக்கில் முன்னோக்கியே நாம் சென்று கொண்டு இருக்கிறோம். கடந்த இருபது மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய புதிய திட்டங்களை மொத்தமாகப் பார்த்தாலே நீங்கள் தெளிவாக அறியலாம். இவை அனைத்தையும் அறிவித்தது சாதனை அல்ல, அந்த அறிவிப்புகள் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதில் தான் இதன் மொத்த வெற்றியும் அடங்கி இருக்கிறது.
மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து என்ற ஒரே ஒரு திட்டத்தின் மூலமாக தினந்தோறும் இலட்சக்கணக்கான மகளிரது பாராட்டுகளை இந்த அரசு பெற்று வருகிறது. தினந்தோறும் காலைச் சிற்றுண்டி வழங்குவதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நம்மை வாழ்த்திக் கொண்டு இருக்கின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கோடிக்கு மேல் பயன் அடைந்திருக்கிறார்கள். இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
மாதம்தோறும் 1000 ரூபாய் பெறக்கூடிய மாணவிகள் பாராட்டி வருகிறார்கள். இவை அனைத்தும் இப்போது நம் கண்ணுக்கு முன்னால் தெரியக்கூடிய மகிழ்ச்சிகள். இதேபோல் அனைத்துத் திட்டங்களாலும் பயன்பெறுபவர்கள் மகிழ்ச்சி அடைந்தால், எட்டுக் கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உயர்ந்துவிடும், இது உங்கள் கையில்தான் இருக்கிறது. அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன? அதில் சுணக்கமோ, முடக்கமோ இருக்கிறது என்றால் எதனால்? அந்தத் திட்டத்தை முழுமையாக முடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் துறையினுடைய செயலாளர்கள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு திட்டத்துக்கு எங்காவது ஒரு இடத்தில் சிறு தடங்கல் இருக்கலாம். அந்தத் தடங்கல் உங்களுக்குத் தான் தெரியும். நிதித் துறையிலோ அல்லது பிற துறைகளில் இருந்தோ ஏதாவது ஒரு உத்தரவு வர வேண்டியதாக இருக்கலாம். அதிகாரிகள் மட்டத்திலே கூட்டத்தைக் கூட்டி, கூட்டுக் கூட்டமாக அதை நடத்தி உடனடியாகப் அதனைச் செயல்படுத்த வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. உங்கள் துறைக்கான அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் பரிசீலனை செய்து, அவை எந்தளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் ஆய்வு செய்திட வேண்டும்.
மதுரையில் கருணாநிதி பெயரால் நூலகம் அமையும் என்று அறிவித்தோம். மளமளவென எழுந்து வருகிறது; திறக்கப்படக்கூடிய நிலைக்கு வந்து விட்டது. சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனை கிண்டியில் அமையும் என்று சொன்னோம், அதுவும் வேக வேகமாகக் கட்டப்பட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு திட்டத்தையும், அறிவிப்பையும் உங்கள் கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்யுங்கள். இருபது மாதம் கடந்துவிட்டது.
திட்டங்களைச் செயல்படுத்துதல், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் தடைகள் ஏற்படலாம். எனவே, முன்கூட்டியே 2023ம் ஆண்டுக்குள் அனைத்துத் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன என்ற நிலையை எட்டியாக வேண்டும். அதற்கான பணிகளை இன்றே நீங்கள் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எந்த அறிவிப்பாக இருந்தாலும் அதனை ஆய்வு செய்து கொண்டே இருந்தால் அது வெற்றி பெற்றுவிடும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே, சேர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்து, இந்த அளவில் எனது முன்னுரையை நான் நிறைவு செய்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago