சென்னை: அண்ணா பல்கலையில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அண்ணா பல்கலைக்கழகத்தில் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. உண்மையில் இத்தகைய அறிவிப்பு மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஆனால், இத்தகைய அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருப்பதன் நோக்கம் பெரும் கவலையை அளிக்கிறது. இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகம் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நியமிக்காது என்று அறிவித்திருப்பதன் நோக்கம், இனி அனைத்து பணிகளிலும் நிரந்தரப் பணியாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள் என்பதாக இருந்திருந்தால் அது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், படித்து விட்டு வேலையின்றி வாடும் இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாகவும் இருந்திருக்கும். ஆனால், அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு அறிவித்திருப்பதன் நோக்கம், தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நேரடியாக நியமிப்பதை நிறுத்தி விட்டு, அவர்களை விட குறைந்த ஊதியத்தில், எந்த காலத்திலும் பணி நிலைப்பு உரிமை கோர முடியாத வகையில், குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது தான்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்கள், டீன்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உதவி எழுத்தர், கணினி இயக்குபவர், அலுவலக உதவியாளர், பியூன் உள்ளிட்ட பணிகளுக்கு இனி தினக்கூலி, தற்காலிக அடிப்படையில் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள்; மாறாக அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் ஊழியர்களை பெறுவது குறித்த நடைமுறைகள் அடுத்த ஒரு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மிகவும் தவறானது.
» ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | செலவைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைத்த வருமான வரித் துறை
» ஈரோடு கிழக்கு தொகுதியில் ‘சாதி’ அரசியல் எடுபடுமா? - கட்சிகளைக் குழப்பும் புதிய புள்ளிவிவரம்
இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், குத்தகை முறையில் ஊழியர்களை நியமனம் செய்வது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது பணியில் இருக்கும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தான். இதை அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர். இது உண்மையாக இருந்தால் 400-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் வேலை இழப்பார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது என்பது இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முடிவை தமிழ்நாடு அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறது. அவ்வாறு வலியுறுத்தும் போதெல்லாம் அம்முடிவை தற்காலிகமாக கிடப்பில் போட்டிருந்த பல்கலைக்கழக நிர்வாகம், இப்போது அந்த முடிவை முழுமூச்சாக செயல்படுத்தத் தயாராகியிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.
அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையாகும். இந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டால் அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அத்தகைய பொறுப்பு கொண்ட அரசாங்கமே, அதை மறந்து விட்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது.
தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அமைத்தது. நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பது தான் அந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆய்வு வரம்பு ஆகும்.
அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து குத்தகை முறை நியமனம் குறித்த ஆய்வு வரம்புகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான வகையில், பல்கலைக்கழகங்களில் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்க நடக்கும் முயற்சிகளை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத்துறை அலுவலகங்களிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை பணி நியமன முறையை தமிழக அரசு கைவிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்; அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago