பட்டியலினத்தவர் நல நிதியை செலவு செய்தாதது ஏன்? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றிய கனிமொழி எம்.பி., நிதிநிலை அறிக்கை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதில்அளிக்கும் வகையில் தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை, தனதுட்விட்டர் பதிவில் கூறியிருப்பதா வது:

நாடாளுமன்றத்தை தங்களது கட்சிப் பொதுக் கூட்டம் என்று கருதி,பொய்யைப் பரப்புவதும், பாதி உண்மையைக் கூறுவதும் திமுகவின் மரபு. இதையே நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் செய்துள்ளார்.

சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்ட மாடல் அரசாக திமுக திகழ்வதாக அவர்கூறுகிறார். ஆனால், வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவை கொட்டியவர்கள் மீது பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

கிராம ஊராட்சித் தலைவரை, திமுக அமைச்சர் சாதிப் பெயரை சொல்லி அழைத்தது, திமுக எம்.பி.ராசாவின் பட்டியலின சகோதர,சகோதரிகள் குறித்த பேச்சு, இந்துகோயில்களை இடித்ததாக பெருமிதம் கொள்ளும் டி.ஆர்.பாலுவின் பேச்சு உள்ளிட்டவையே, கடந்த 20 மாதங்களில் திமுக அரசின் சாதனைகளாகும்.

ஆளுநர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள் குறித்து ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். தேர்வு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், திருக்குறளை மேற்கோள் காட்டினார். 13 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், திருவள்ளுவர் சிலையைவிட ஒரு அடி அதிக உயரத்தில் பேனா சிலையை வைக்க திமுக விரும்புவது ஏன் என்பதை கனிமொழி விளக்க வேண்டும். மத்திய அரசில் 10 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2.17 லட்சம் பேருக்கு நியமனஆணையை பிரதமர் வழங்கிவிட்டார். திமுக கூட்டணியில் இருந்தகாங்கிரஸ் ஆட்சியின்போதும், தமிழைவிட (ரூ.75 கோடி) சம்ஸ்கிருதத்துக்கு (ரூ.675 கோடி) அதிக நிதிஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறும் கனிமொழிக்கு, ரூ.30,961 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதை நினைவுகூர் கிறோம். பட்டியலின மக்களின் நலனுக்காக, 13 திட்டங்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதியை தமிழக அரசு ஏன் செலவழிக்கவில்லை. இதற்கான பதிலைகனிமொழி கண்டறிவார் என நம்புகிறோம். இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE