சமூக நலத்துறை அமைச்சர் பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் குழந்தைகள் காப்பகங்களில் குழந்தைகள் கடத்தல், பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சியடைய வைக்கும் விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் செயல்படுகிறது சமூக பாதுகாப்புத் துறை. முதியோர் உதவித் தொகை, கணவரை இழந்த பெண்களுக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் நலம், திருநங்கைகள் நலம், குழந்தைகள் நலம் உள்ளிட்டவற்றை கையாள்வது மேற்கண்ட துறையின் முக்கியப் பொறுப்பு. ஆனால், தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே சமூக நலத்துறை நிர்வாக சீர்கேடுகளால் முடங்கிக் கிடக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், இவற்றை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய சமூக நலத்துறை அவற்றைக் கண்டுகொள்ளாமல் காப்பகங்களின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தது. பல்வேறு காப்பகங்களில் குழந்தைகள் தத்து கொடுக்கப்படுவதாகச் சொல்லி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டனர். பெண் குழந்தைகள் பலர் வணிக ரீதியாக பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்காகவும் குழந்தைகள் கடத்தப்பட்டனர்.
இதனால், கடந்த 2011-12-ம் ஆண்டு சமூக ஆர்வலரான ‘பாடம்’ நாராயணன் தமிழகம் முழுவதும் ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தார். அதன்படி, குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மாவட்டம் தோறும் குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் ஏற்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் அமைக்கப்பட்டன. இவற்றுக்கான தலைவர், உறுப்பினர்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி, மாவட்ட காவல் ஆணையர் ஆகியோர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்தனர். இந்தப் பட்டியல் மாநில அரசின் சமூக நலத்துறைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அனுப்பப் பட்டது. ஆனால், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அதை கிடப்பில் போட்டுவிட்டது சமூக நலத்துறை.
இதுகுறித்து ‘பாடம்’ நாராயணன் ‘தி இந்து’-விடம் கூறுகையில், “திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மோஸ் மினிஸ்ட்ரீஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கிய குழந்தைகள் காப்பகத்தில் கடந்த 2014-ல் திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் ஆய்வு செய்தார். அதில் அனுமதியின்றி காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்போது அதன் நிர்வாகி வெளிநாட்டுக்கு தலைமறைவாகிவிட்டார். தமிழ்நாடு ஹாஸ்டல் மற்றும் பெண்கள் சிறார் இருப்பிடம் முறைப்படுத்தும் சட்டம் 2014 மற்றும் இளம் சிறார் நீதி சட்டம் 2000 முதலியவற்றின் பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இன்று வரை முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருச்சியிலும் மதுரையிலும் இயங்கி வந்த மேற்கண்ட காப்பகத்தில் இருந்த குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட தகவல் ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் நடத்திய நேரடி ஆய்வில் தெரியவந்தது. தவிர, அந்தக் குழந்தைகளை, சட்டத்துக்கு புறம்பாக வெளிநாடு களுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியதும் அம்பலமானது. இது ஓர் உதாரணம் மட்டுமே. கோவை, கருமத்தம்பட்டி அருகே கோதம்பாளையத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் காது கேளாத, வாய் பேச இயலாத பெண் குழந்தைகளிடம் ஆபாச படங்களைக் காட்டி பல ஆண்டுகளாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஐந்து பேரை இரு நாட்களுக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரவலாக இதுபோன்ற கொடுமைகள் நடந்துவருகின்றன.
இதை எல்லாம் கண்காணிக்க வேண்டிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தகுதியான நபர்களை அரசு நியமிப்பது இல்லை. அதிமுக கட்சியின் மகளிர் அணி சார்ந்த பெண்களை தலைவராக நியமிக்கிறார்கள். தற்போது தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சமூக நலத்துறை அமைச்சர் மீது ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் கொடுத்திருக்கிறார்.
நாங்கள் தொடர்ந்த பொது நல வழக்குகளின் காரணமாக கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பதவி. ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஏற்படுத்தப்பட்டு அதில் 10 ஊழியர் பணியமர்த்தப்பட வேண்டும். இவர்கள் மாவட்ட குழந்தை நல அலுவலர் வழிகாட்டுதலில் செயல்படுவார்கள்.
குழந்தைகள் காப்பகங்களை கண்காணிப்பது, ஆதரவற்ற பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, குழந்தை திருமணங்களைத் தடுப்பது, பல்வேறு வழிகளில் மீட்கப்பட்ட குழந்தை களை பாதுகாத்து பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த குழு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உட்பட மேற்கண்ட பணியாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுவும் இந்தத் துறையில் ஊழல் பெருக காரணமாகிவிட்டது.
விதிமுறைகளை மீறி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு அனுமதி அளிப்பது, அங்கு நடக் கும் பாலியல் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது, வெளிநாடுகளுக்கு பெண் குழந்தைகள் கடத்துவது உள்ளிட்ட பல்வேறு வகையில் சமூக நலத்துறையில் கோடிக்கணக்கான பணம் புரள்கிறது. அதன் அடிப்படையில்தான் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் அமைச்சர் ஒருவர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார். தீவிரமாக விசாரணை நடத்தினால் இன்னும் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago