மாணவியின் மருத்துவப் படிப்புக் கட்டணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட கும்பகோணம் எம்.எல்.ஏ

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி திருக்கடையூரில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கும்பகோணம், காலசந்திக் கட்டளையைச் சேர்ந்த தாராசுரம் காய்கறி மார்க்கெட் தொழிலாளி வி.ஜெகநாதனின் 2-வது மகள் உதயா பல் மருத்துவ படிப்பை மேலும் தொடர கல்விக்கட்டணம் செலுத்த உதவித் தொகை வழங்க வேண்டும் என திமுகவினரை அவர் வலியுறுத்தினார்.

அப்போது, அங்கிருந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அம்மாணவியின் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் தனது சொந்த செலவில் ஏற்றுக்கொள்வதாக, மு.க.ஸ்டாலின் முன்னிலை வாக்குறுதி அளித்தார்.

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி முதலாமாண்டுக்கான கல்வி கட்டணமான ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், 2021-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி, 2-ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணமான ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தையும், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி 3-ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணமான ரூ. 6 லட்சத்து 72 ஆயிரத்தை வழங்கினார்.

இந்நிலையில், இன்று காலை சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாணவியின் 4-ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணமான ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளை, அவரது பெற்றோர்களிடம் வழங்கினார். இம்மாணவியின் மருத்துவப் படிப்புக்காக 4-ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.22 லட்சத்து 22 ஆயிரத்தை தனது சொந்த பணத்திலிருந்து அவர் வழங்கி உள்ளார்.

இதில், மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் டி.கணேசன், திமுக துணைச் செயலாளர் ஜெ.சசிதரன், ஒன்றிய துணைச் செயலாளர் க.நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE