“அரும்பின் அழகு டானியாவின் புன்னகையில்” - சிறுமியிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, அரசின் உதவியுடன் சிகிச்சை பெற்ற சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் “அரும்பின் அழகு டானியாவின் புன்னகையில்” என்று பதிவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச் சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து அறிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியன்று சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.8) இரண்டாவது முறையாக, சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முதல்வர், எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி, தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறுமி டானியாவின் தாய் திருமதி சௌபாக்கியம், தனது இல்லத்திற்கு நேரில் வந்து மகளை நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்ததற்காக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அரும்பின் அழகு டானியாவின் புன்னகையில்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE