சென்னை: “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்ட “புதுமைப் பெண்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.8) தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "என்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்னால், மூன்று மகிழ்ச்சியான செய்திகளை, என் மனதில் ஆழமாக பதிந்திருக்கக் கூடிய செய்திகளை அதிலே குறிப்பிட்டு ஒரு மூன்று செய்திகளை உங்களிடத்தில் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
முதலாவது, நேற்றைய தினம் கோட்டையில் நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய, என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடிய காவல் துறையின் சார்பில் புதிய பணி ஆணைகள் வழங்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரத்தில், அப்பொழுது எனக்கு அருகில் இருந்த டி.ஜி.பி.-யிடத்திலே ஒரு கேள்வியைக் கேட்டேன், இன்றைக்கு பணி ஆணைகள் வழங்குகிறோம், அது எவ்வளவு பேருக்கு வழங்கப்படுகிறது என்று கேட்டேன்.
17 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு அந்த பணி ஆணை வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுச் சொன்னார். அதோடு நிறுத்தாமல், இன்னும் ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னார். வழங்கப்பட்டிருக்கக்கூடிய அந்த 17 பேரில், 13 பேர் பெண்கள் என்று மகிழ்ச்சியோடு சொன்னார். அந்த 13 பெண்கள் என்னிடத்தில் அந்த ஆணையைப் பெறுவதற்காக வந்தபோது, மிடுக்கோடு வந்து என்னிடத்தில் அந்த ஆணையைப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
அடுத்து, அதேபோல் இன்று காலையில் இந்த நிகழ்ச்சிக்காக நான் காரில் வந்துகொண்டிருந்தபோது, என்னோடு காரில் அமர்ந்திருந்த உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி ஒரு செய்தியைச் சொன்னார். இந்த புதுமை பெண் திட்டத்தால் பெண்கள் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார். ஆகவே, இது இரண்டாவது மகிழ்ச்சி.
மூன்றாவதாக மகிழ்ச்சி, அமைச்சர் நாசர் சொன்னது. இந்தக் கல்லூரிக்கு ஏற்கெனவே நான் 33 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வந்திருப்பதாகவும், இந்தக் கல்லூரியினுடைய ஆண்டு விழாவில் பங்கேற்றதை அவர் நினைவுப்படுத்தி எடுத்துச் சொன்னார். அப்படிப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியோடு என் உள்ளத்திலே சுமந்துகொண்டு தான் இப்போது இந்த “புதுமைப் பெண் திட்டத்தின்" இரண்டாம் கட்ட திட்டத்தினைத் தொடங்கி வைக்க நான் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தப் பட்டாபிராம், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரிக்கு நான் வந்திருப்பதை உள்ளபடியே பெருமையாகவே கருதிக் கொண்டு இருக்கிறேன். 'எல்லா மதங்களும் உண்மை என்ற சமரச ஞானத்தை ஊட்டத் தவறாதவர்'-என்றும், 'கண்ணன் கலாசாலை போன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால் தேசம் மறுபடி மேன்மை அடையும்'- என்றும் மகாகவி பாரதியாரே கலவல கண்ணன் அவர்களைப் பற்றிப் போற்றியிருக்கிறார். வணிகத்தின் பெரும்பகுதியை சமூக சேவைக்குப் பயன்படுத்தியதால், எல்லோரும் அவரை ‘தரும மூர்த்தி’ என்று சொன்னார்கள்.
கல்வியை பலருக்கும் எட்டாக்கனியாக அந்தக் காலத்தில் சிலர் மாற்றி வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட காலத்திலேயே, அனைவருக்கும் எழுத்தறிவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பல்வேறு இடங்களில் பள்ளிகளை நிறுவினார் அவர். சிந்தாதிரிப்பேட்டை, சவுகார்பேட்டை, பாரிமுனை, இந்த பட்டாபிராம் என்று பல இடங்களிலும் அவர் பள்ளிகளை நிறுவினார். 1969-ம் ஆண்டு அரசு நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட கல்லூரி இது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு முதன்முதலாக ஆட்சிக்கு வந்த காலத்தில், அரசு நிதி உதவியோடு தொடங்கப்பட்ட கல்லூரி இது.
முதல்வராக கருணாநிதி தன்னுடைய பேனாவால் போட்ட ஒரே ஒரு கையெழுத்துதான், இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் லட்சக்கணக்கான மாணவ - மாணவிகளை உருவாக்கி இருக்கிறது என்று நினைக்கும்போது அளவில்லா பெருமையை நாம் அடைந்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு பெருமைகள் வாய்ந்த பெண் கல்விக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே முக்கியத்துவம் தந்த தருமமூர்த்தி கண்ணன் பெயரால் அமைந்த இந்தக் கல்லூரியில், புதுமைப் பெண் என்கிற திட்டத்தை சிறப்பாக நடத்துகிற இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, மிகமிக பொருத்தமாக இது அமைந்திருக்கிறது.
ஒரு நாடு செழித்து தன்னிறைவுடன் திகழ வேண்டுமென்று சொன்னால், நாட்டில் உள்ள மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். முக்கியமாக, கல்வி என்பது பெண்களுக்கு மிகமிக முக்கியம்! கல்வியைத்தான் அழியாச் செல்வம் என்று சொன்னார் வான்புகழ் கொண்ட வள்ளுவர் பெருந்தகை . 'கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்' என்று சொன்னார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
அத்தகைய கல்விச் செல்வத்தை அனைவரும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. மத ரீதியாக – வர்க்க ரீதியாக – சாதி ரீதியாக – இன ரீதியாக – பால் ரீதியாக, வேறுபாடுகளும் தீண்டாமைகளும் கற்பிக்கப்பட்டிருந்த இந்த நிலத்தில், அனைவரும் சமம் - அனைவருக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான், திராவிட இயக்கம்.
திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது, ஏதோ தனித்த இயக்கத்தினுடைய வரலாறோ, தனிப்பட்ட மனிதர்களுடைய வரலாறோ கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இனம், சுயமரியாதை உணர்வோடு எப்படி போராடி மேலே வந்து இன்றைக்கு உயர்ந்து இருக்கக்கூடிய ஒரு போராட்ட வரலாறு! அதுதான் தமிழ்நாட்டினுடைய வரலாறு! அதுதான் நம்முடைய வரலாறு!
அதனால் தான், அடக்குமுறை எந்த வடிவில் வந்தாலும் நாம் எதிர்க்கிறோம்! சமத்துவம் பேசுகிறோம்! இந்த விழிப்புணர்வு நமக்கு அதிகமாக தேவை. அதிகமாக தேவை என்கிற காரணத்தால்தான், இந்தக் கல்வியை நாம் கற்றாக வேண்டும். அப்படித்தான் போராடி இந்த உரிமையைப் பெற்றிருக்கிறோம். அதற்குக் காரணம் கல்விதான்! கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கும் கடமையை நீதிக்கட்சி காலத்தில் இருந்து செய்து கொண்டு வருகிறோம். அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்காகத்தான் சமூகநீதிக் கருத்தியல் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் கல்வி எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்றுதான், நம்முடைய திராவிட இயக்கத்தில் பல்வேறு திட்டங்கள் இதற்காக உருவாக்கப்பட்டது. அதிலும், பெண் சமூகத்தைக் கூடுதலாகக் கவனிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களை மகளிருக்காக உருவாக்கப்பட்டது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்,
1921-ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1989-இல் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, இந்தியாவிலேயே முதன்முதலாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்ட அந்த புரட்சி நடந்தது. அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம். இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளை பார்க்கிறோம், இன்றைக்கு 50 சதவீதம் பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதற்கு மூல காரணமே கருணாநிதி ஆட்சிக்காலம் தான், முதன்முதலாக பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதுதான் இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து 50 சதவீதமாக உருவாகியிருக்கிறது. மகளிர் உரிமைக்காக நாம் எவ்வளவோ செய்திருக்கிறோம், எவ்வளவோ போராடியிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல. மகளிர் சொந்தக் காலில் நிற்க வேண்டும், யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது. அவரவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சுயமாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான், மகளிர் சுய உதவிக் குழு என்கிற ஒரு அற்புதமான திட்டம். அது கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் தொடங்கப்பட்டது. 1989-1990-ல் நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தருமபுரியில் முதன்முதலாக அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கில் அந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று நானே உருவாக்கினேன்.
அதேபோலத் தான் இப்போது கூட, நாம் ஆட்சிக்கு வந்த உடனே மகளிருக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தோம். முதல் கையெழுத்து எந்த கையெழுத்து தெரியுமா? மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்த திட்டத்திற்குத்தான் முதல் கையெழுத்து போட்டேன். அந்தத் திட்டத்தினை கணக்கெடுத்துப் பார்த்தால், இதுவரை 180 கோடி பயணங்களை பெண்கள் கட்டணமில்லாமல் மேற்கொண்டுள்ளார்கள். இந்த வரிசையில் தொடங்கப்பட்ட மகத்தான, ஒரு அற்புதமான திட்டம்தான், திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருக்கக்கூடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களது பெயரால் தொடங்கப்பட்டிருக்கக்கூடிய இந்த புதுமைப் பெண் என்கிற ஒரு திட்டம்!
ஏன் இந்த புதுமைப் பெண் திட்டத்திற்கு இராமாமிர்தம் அம்மையார் அவர்களது பெயரை வைத்திருக்கிறோம் என்று கேட்டீர்களானால், அந்த அம்மையார், அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடியவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கையெல்லாம் எப்படி இருந்தது என்று உங்களுடைய முன்னோர்கள் சொல்லியிருப்பார்கள், நீங்களும் தெரிந்திருப்பீர்கள். அந்த மூடநம்பிக்கை காரணமாக பெண்கள் முடக்கப்பட்டு வைத்திருந்தார்கள். அப்படி முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவைத் திறந்தவர்தான் அந்த இராமாமிர்தம் அம்மையார்.
100 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, பெரியாருடன் இணைந்து மகத்தான் புரட்சியை நடத்தியவர் இராமாமிர்தம் அம்மையார். 1938-ம் ஆண்டு தமிழ்காக்கும் போராட்டத்துக்காக திருச்சியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம், பேரணி நடந்தது. அந்தப் பேரணியில் பங்கேற்ற பெண்மணி தான் இராமாமிர்தம் அம்மையார். அதனால்தான், திராவிட இயக்கத்தின் தீரர்களுக்கு விருதுகளை வழங்கியபோது, முதல் விருதாக பேரறிஞர் அண்ணா முடிவெடுத்து யாருக்கு வழங்கினார்கள் என்று கேட்டீர்களானால், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்குத்தான் அந்த அந்த முதல் விருதை வழங்கி பெருமைப்படுத்தினார்கள். அத்தகைய பெருமைமிகு அம்மையார் பெயரால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு செய்தியைக்கூட உங்களுக்கு சொல்ல வேண்டும். இராமாமிர்தம் பிறந்த போது அவரது குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தார்கள். அந்த அம்மையாரை வளர்ப்பதற்கு அவரைப் பெற்றெடுத்திருக்கக்கூடிய தாய் மிகுந்த சிரமப்பட்டார்கள். அப்படிப்பட்ட சிரமம் அடைந்த காரணத்தினால் என்ன செய்தார்கள் என்றால், தனது பிள்ளையை அந்தக் காலத்தில் பத்து ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள். பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டவர்தான் இராமாமிர்தம் அம்மையார். அப்படி பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட இராமாமிர்தம் பெயரால்தான் இந்த பல்லாயிரக்கணக்கான பெண் பிள்ளைகள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய ஒரு அற்புதமான திட்டத்தை நாம் இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறோம்.
இந்தத் திட்டம் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை முதன்முதலில் தொடங்கி வைத்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும். டெல்லியில் இருக்கக்கூடிய முதல்வர் கெஜ்ரிவால் தான் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதியன்று தலைநகர் டெல்லியில் குடியரசு நாள் அணிவகுப்பு நடந்தது. அந்த அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தி ஒன்று வந்தது. அந்த அலங்கால ஊர்தியில் என்ன சிறப்பு என்று கேட்டால், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மகளிர்கள் ஏழு பேர். அந்த ஏழு பேர்களின் சிலைகளை அதில் வடிவமைத்து அந்த பேரணியில் அணி வகுத்து வந்தது. அந்த ஏழு பேரில் ஒருவர் யாரென்று கேட்டால், இராமாமிர்தம் சிலையும் அதில் இடம் பெற்றிருந்தது. எனவே, அவருடைய பெயரால்தான் இந்தத் திட்டம் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு சிரமங்களுக்கு இடையில், பள்ளிக்கல்வி பயின்றுள்ள அரசுப்பள்ளி மாணவிகள், College போகாமல் drop-out ஆகக்கூடாது என்பதற்காக இந்தத் திட்டம். இந்த மூவலூர் அம்மையார் பெயரால் உயர்கல்வி உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இந்தத் திட்டத்தின் மூலமாக 6-ம் வகுப்பில் படிக்கக் கூடியவர்கள், அவர்கள் தொடர்ந்து 12-ம் வகுப்பு வரை படித்து, முடித்து, மேற்படிப்பிற்கு, கல்லூரிக்கு செல்லுகின்ற நேரத்தில் அவர்களுக்கு வசதி இல்லாத காரணத்தினால், கல்லூரிக்கு செல்லமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகிற இந்தத் திட்டத்தை நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகைகளை பெற்று வந்தாலும் இந்தத் திட்டத்தில் கூடுதலாக இந்த உதவியை நீங்கள் பெறுகிறீர்கள்.
முதற்கட்டமாக, இந்தத் திட்டம் வட சென்னையில் பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டது. அப்படி அந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, இன்றைக்கு வரைக்கும் பார்த்தீர்கள் என்றால், இதுவரைக்கும் 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் பயனடைந்திருக்கிறார்கள். இதற்காக கடந்த ஐந்து மாதங்களில், 69 கோடியே 44 லட்சம் ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தின் பொருளாதாரச் சூழலால் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டிய நிலையில் இருந்த 12 ஆயிரம் மாணவிகள் இத்தொகை கிடைத்த காரணத்தினால், இன்றைக்கு அந்தப் படிப்பைத் தொடர்கிறார்கள் என்பதுதான் இந்தத் திட்டத்தின் மாபெரும் வெற்றி!
இப்போது, இது இரண்டாம் கட்டமாக இந்தத் திட்டத்தை நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இந்த பட்டாபிராம் இந்து கல்லூரிக்கு நான் வந்திருக்கிறேன். பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்ணுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கின்ற காரணத்தினால், அவர்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவருடைய எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறனும் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தைத் திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். சொந்தக் காலில் பெண்கள் நிற்பார்கள் - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்து, உயர்கல்வியை தொடர முடியாமல் கைவிட்ட 10 ஆயிரத்து 146 மாணவிகள் இந்தத் திட்டத்தின் வாயிலாக தங்களது உயர்கல்வியை பயிலத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவே இந்தத் திட்டத்தின் வரவேற்பிற்கும், வெற்றிக்கும் சான்றாக அமைந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்கக்கூடிய மொத்த மாணவிகள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 16 பேர்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 48 ஆயிரத்து 660 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 50 ஆயிரத்து 550 பேர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 44 ஆயிரத்து 880 பேர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 1,900 பேர் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.
மேலும் பல உதவிகளைச் செய்து கொடுக்க நாம் திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். ஆகவே, உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, நன்றாகப் படியுங்கள் - படியுங்கள் - படியுங்கள் என்பது மட்டும்தான். உயர்கல்வியை படியுங்கள். ஏதாவது ஒரு பாடத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். தகுதியான வேலைகளில் சேருங்கள். பெண்ணுக்கு திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் - பொருளாதார சுதந்திரமும் முக்கியம். தகுதியுள்ள வேலைவாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கும் காலத்தில் திறமையோடு செயல்படக்கூடிய எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வீட்டுக்குள்ளே இருந்து விடுகிறார்கள்.
கல்வி அறிவும், கலைத்திறனும், தனித்திறமைகளும்தான் யாராலும் அழிக்க முடியாத சொத்துகள்! அதனைப் பயன்படுத்தி வாழ்நாள் முழுக்க நீங்கள் அனைவரும் உங்களுக்கென ஒரு தனித்த ஓர் அடையாளத்துடன் திகழ வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். படிக்கும் காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். கல்லூரிக் காலத்தை படிப்புக்கும், உயர்வுக்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை இந்த நாட்டினுடைய முதல்வராக மட்டுமல்ல, உங்களுடைய சகோதரனாக, உங்களுடைய உடன்பிறப்புகளில் ஒருவனாக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் தந்தையாக இருந்து நான் உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்களை வளர்த்தெடுக்கவே இந்தத் திட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இதை இந்த அரசே உங்களின் தோழனாக கருதி, இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை செய்வோம், என்னென்ன உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தோம். அவைகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவிற்கு நிறைவேற்றப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஒன்றிரண்டு திட்டங்கள் இன்னும் நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. எவ்வளவுதான் நிதி நெருக்கடி நிலை இருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து, அதையெல்லாம் ஓரளவிற்கு சரிசெய்து, முடிந்த வரைக்கும், நாம் அறிவித்த திட்டங்களை இதுவரைக்கும் பெருமையோடு சொல்கிறேன், 85 சதவீதத்திற்கு மேல் உறுதிமொழிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
இன்னும் ஒரு 10, 15 சதவீதம் மிச்சம் இருக்கிறது அதை நான் மறுக்கவில்லை. அதையும் நான் உறுதியோடு சொல்கிறேன். நிச்சயமாக, உறுதியாக அதையும் வரக்கூடிய காலக்கட்டத்தில் முழுமையாக நிறைவேற்றக்கூடிய ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. அறிவித்த திட்டங்கள் மட்டுமல்ல, அறிவிக்காத திட்டங்களும் இன்றைக்கு நிறைவேற்றப்படுகிறது. அதுதான் இந்த புதுமைப் பெண் திட்டம்.
தேர்தல் அறிக்கையில் புதுமைப் பெண் திட்டம் அறிவிக்கவில்லை. அதை இன்றைக்கு நிறைவேற்றுகிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை, சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஓர் ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, அப்படிப்பட்ட ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள இந்தக் கல்வியை நீங்கள் நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடையக்கூடிய நம்முடைய மாணவியர்களை நான் உங்கள் அனைவரின் சார்பில், வாழ்த்தி, விடைபெறுகிறேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago