''மின்துறை தொடர்பாக என்னுடன் விவாதிக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி தயாரா?'' - அமைச்சர் செந்தில் பாலாஜி சவால்

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் விவாதம் செய்ய நான் தயார்; அவர் தயாரா? என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “திமுக தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்லிருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அந்த அறிவிப்பினை வெளியிட முடியவில்லை. எனவே, இலவச மின்சார அளவை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிட, மத்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் விசைத்தி, கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும்.

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும், மின்கட்டணம் 180 சதவீதம் உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சியில் தற்பொழுது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்ற வசதிகள் உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக ஆட்சியில் மின்வாரியத்திற்கு 1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரிக் கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினாலும், ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால்தான், தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்மிகை மாநிலம் என அதிமுக ஆட்சியில் அறிவித்துக் கொண்டார்கள்.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து, அதிக வட்டிக்கு மின்வாரியம் கடன் வாங்கி இருந்தது. அந்த வட்டியை குறைத்துள்ளோம். மின் விநியோகத்தில் மின்சார இழப்பு 17 % உள்ளது. அதை கடந்தாண்டு 0.7 % குறைத்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 26 ஆயிரம் புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன.

விவசாய பயன்பாடு மற்றும் குடியிருப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மின் கட்டணத்தை நுகர்வோர் தெரிந்துகொள்ள விரைவில் வசதி செய்யப்படும். அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும். அதிமுக ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?

மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்க பிப்ரவரி 15 கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. இவ்வாறு இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 32,000 மெகாவட்டாகும். இதை அடுத்த பத்தாண்டுகளில் 64,000 என உயர்த்த திட்டமிட்டு பணிகளை துவக்கி உள்ளோம். மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அதிமுக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை. மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. அதிமுக ஈபிஎஸ் அணி பாஜகவின் பி டீமாக செயல்படுகிறது. அதிமுக ஒன்றுபட்டாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் திமுக தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.'' என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்