சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கையில், "தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் கொள்முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஒவ்வொரு நாளும் 1000 மூட்டைகள் கூட நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 10.50 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. அவற்றில் இதுவரை 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விட்டன.
மீதமுள்ள 7 லட்சம் ஏக்கரில், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் அடுத்த சில நாட்களில் அறுவடை செய்யப்படவுள்ளன. அறுவடை தீவீரமடைந்திருப்பதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அதிக அளவில் நெல் வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், கொள்முதல் தீவிரமடையாததால் லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 456 கொள்முதல் நிலையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 519, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 159, மயிலாடுதுறை மாவட்டத்தில் 150 என மொத்தம் 1284 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையில் நெல் மூட்டைகள் வருகின்றன. ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அவற்றை அடுக்கி வைக்க போதிய இட வசதி இல்லாததால், தினமும் 1000 மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மழையால் ஏற்பட்ட பாதிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல கொள்முதல் நிலையங்களில் தினமும் 500-600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதனால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் இப்போது தான் சம்பா அறுவடை தொடங்கியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் சம்பா அறுவடை உச்சத்தை அடைந்து விடும்; தாளடி அறுவடையும் தொடங்கி விடும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் நிலையங்களுக்கு வரக் கூடும். அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளில் எண்ணிக்கை பல லட்சமாக உயரக்கூடும்.
கடந்த வாரத்தில் பெய்தது போன்ற மழை, அப்போது பெய்தால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி விடும். கடந்த வாரம் பெய்த மழையிலேயே பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைத்து சேதமடைந்து விட்டன. அவற்றின் ஈரப்பதம் 25 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பதால் அவற்றை இப்போதைக்கு உழவர்களால் விற்பனை செய்ய முடியாது. அதனால் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு ஏற்படவிருக்கும் இழப்பின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாதது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை நிலவுவதும், அதனால் ஒவ்வொரு நாளும் 1000-க்கும் குறைவான நெல் மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதும் இப்போது ஏற்பட்ட சிக்கல் அல்ல. காலம் காலமாக இதேநிலை தான் காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளும், விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மூட்டைகளும் நனைத்து நாசமாவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
இந்த நிலையை மாற்றுவதற்காக கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5,000 மூட்டைகளை இருப்பு வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தியிருக்கிறது. அதை தமிழக அரசு செவிமடுக்காததன் விளைவு தான் நேரடி கொள்முதல் நிலையங்களில் இன்று நிலவும் சூழல் ஆகும்.
உலகிலேயே சபிக்கப்பட்ட தொழில் விவசாயம் தான் என்று சொல்லும் அளவுக்கு உழவர்களில் நிலை மோசமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உழவர்கள் ஏதோ ஒரு சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். நடப்பாண்டிலாவது அவர்களுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க வேண்டும். அதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகள் அனைத்தும் அதே நாளில் கொள்முதல் செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்; அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளை இருப்பு வைக்கும் அளவுக்கு கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago