சென்னை: பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி 17 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேலும் ஓராண்டிற்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற நிலை காலம் காலமாக தொடர்வதை அனுமதிப்பது அன்னை தமிழுக்கு இழைக்கப்படும் இரண்டகமாகும்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006-ஆம் ஆண்டு ஜூன் 9-ம் நாள் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவே இப்படி ஒரு சட்டத்தை முதல்வர் கருணாநிதி தலைமையிலான அன்றைய அரசு கொண்டு வந்தது. அச்சட்டத்தின்படி 2006-ம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு, 2007-ம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு, 2008-ம் ஆண்டில் மூன்றாம் வகுப்பு என படிப்படியாக தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015-16ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015-16ம் ஆண்டில் தமிழ் கட்டாயப்பாட சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடை உயர்நீதிமன்றத்தால் 2021-22 வரை நீட்டிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இந்த தடையை நீட்டிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதை எதிர்த்து மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் மீது தான் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தகுதியின் அடிப்படையிலானது அல்ல; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து முடிக்க இயலாது என்ற அடிப்படையில் தான் இந்த இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வரும் ஜூலை 11-ம் தேதி தொடங்கும் வாரத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணையை நடத்தவுள்ள உச்சநீதிமன்றம், அதன்பின் இறுதித் தீர்ப்பை வழங்கும். ஆனால், 2016-ம் ஆண்டில் கட்டாயப் பாடமாகியிருக்க வேண்டிய தமிழ் மொழி, அந்த தகுதியை அடைய இன்னும் ஒராண்டு ஆகுமே? என்பது தான் கவலையளிக்கிறது.
தமிழகத்தில் தமிழை கட்டாயப்பாடமாக கற்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மொழிச் சிறுபான்மை பள்ளிகள் கோருவதில் நியாயமும் இல்லை; அறமும் இல்லை. மொழிச் சிறுபான்மை பள்ளிகளில் படிப்போர் அனைவரும் மொழிச் சிறுபான்மையினர் அல்ல. மொழிச் சிறுபான்மையினராகவே இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படித்து தான் ஆக வேண்டும். ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாகவும், இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றை விருப்பப்பாடமாகவும் கற்பிக்கும் பள்ளிகள், தமிழ்நாட்டு அரசின் உதவிகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, தமிழை மட்டும் கட்டாயப் பாடமாக கற்பிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது; உரிமையும் கிடையாது.
அதுமட்டுமின்றி, தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் நடைமுறையில் சிறுபான்மை பள்ளிகள் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப்பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகங்களும் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும். அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோருவது எவ்வகையில் நியாயம்?
தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக, அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போதே சிறுபான்மை பள்ளிகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்,‘‘அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ எனத் தீர்ப்பளித்தது.
சிறுபான்மை பள்ளிகளின் கோரிக்கை நியாயமற்றது என்பது அவற்றின் நிர்வாகங்களுக்கே தெரியும். ஆனால், அந்த பள்ளிகளின் முயற்சிகளை முறியடிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது தான் ஏமாற்றமளிக்கிறது. தமிழ் கட்டாயப் பாடத்தை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், நடப்பாண்டிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்கும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது.
தமிழக அரசு வழங்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் பெயர்கள் அப்படியே அச்சிடப்படும் நிலையில், தமிழ் என்று இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் மொழிப்பாடம் என்று குறிப்பிடப்படுவதை காண சகிக்கவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி, அடுத்த ஆண்டிலிருந்தாவது பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago