சென்னை: தமிழகத்தில் பருவம் தவறி பெய்தமழையால் நீரில் மூழ்கி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வங்கக்கடல், மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த ஜன. 29-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் டெல்டா உள்ளிட்டமாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழைநீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட்டுள்ளது.
பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்ட டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேளாண் துறை அமைச்சர், உணவுத் துறை அமைச்சர், மூத்தஅதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவும், விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறியவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
» சிவகாசி மாநகராட்சி ஆணையருக்கு அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல் - எஸ்பியிடம் புகார்
இதைத் தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி நேரில் ஆய்வு செய்தனர். விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து, கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதற்கிடையே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லைகொள்முதல் செய்யும் வகையில் விதிமுறைகளில் உரிய தளர்வுகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி கூறியதுடன், அதுதொடர்பான அறிக்கையையும் வழங்கினர்.
அமைச்சர்களின் கருத்துகள், அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகுப்பை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவாரணத் தொகுப்பு விவரம்:
* கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய்துறை, வேளாண்மை துறை ஒருங்கிணைந்து பயிர் சேத கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
* அறுவடைக்கு தயாராக இருந்து, கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
* நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
* நெல் தரிசில் உளுந்து தெளித்து, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் வழங்கப்படும்.
* கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடனே மேற்கொள்ள, வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.
* பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருந்தால், கூடுதலாக மீண்டும் தற்போது பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பார்வையிட மத்திய குழு வருகை: தமிழகத்தில் பருவம் தவறிய மழையால் காவிரி டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது நிவாரணம் அறிவித்துள்ளார். இருப்பினும், நெல் கொள்முதல் தொடர்பான விதிமுறைகளில் கூடுதல் தளர்வு அளிக்க வேண்டும். அதாவது, 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதன் அடிப்படையில், மத்திய உணவுத் துறை செயலருக்கு தமிழக உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனும் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. சென்னையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி.யூனுஸ், பெங்களூரு தரக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், ஒய்.போயா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழு ஒருங்கிணைப்பாளராக பிரபாகரன் செயல்படுவார். இந்த குழுவினர் நெல், பயிர் மாதிரிகளை சேகரித்து, தமிழகத்தில் உள்ள உணவுக் கழகத்தின் பரிசோதனைக் கூடத்தில் சோதனை மேற்கொண்டு அறிக்கை அளிப்பார்கள் என்று இதுதொடர்பான உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago